நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து முன்கூட்டியே ரிலீஸ் ஆகிறது.  அதாவது ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது என படக்குழு அறிவித்து இருந்த நிலையில், தற்போது ஜூலை மாதம் 14ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. 


மண்டேலா திரைப்படத்துக்காக தேசிய விருது வென்ற இயக்குனர் மடோன் அஸ்வின். அவருடன் நடிகர் சிவகார்த்திகேயன் கூட்டணி சேர்ந்துள்ள திரைப்படம் ’மாவீரன்’. ப்ரின்ஸ் படத் தோல்வியால் சிறு சிறு சறுக்கலை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் படத்தின் மீது அதிக கவனம் செலுத்தி நடித்துள்ளார். 


இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்க நடிகை சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு, டோலிவுட் நடிகர் சுனில் எனப் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மண்டேலா படத்திற்கு இசையமைத்த பரத் சங்கர் தான் மாவீரன் திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். 


சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரன் படத்தின் சீனா சீனா எனும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இப்படத்தில் சண்டைக் காட்சிகளுக்காக அதிநவீன மோகோபாட் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின, இது போன்ற அதிநவீன மோகோபாட் கேமராக்கள் 'விக்ரம்' படத்திற்காக லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.  


மாவீரன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்ற அதிகாரப்பூர்வமான அப்டேட்டை "என் அருமை சகோதர சகோதரிகளே! உங்களை ஆகஸ்ட் 11-ஆம் தேதி சந்திக்கிறேன்... வீரமே ஜெயம் !" என தனது ட்விட்டர் பக்கம் மூலம் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். ஆனால் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து சிவகார்த்திகேயன் தனது பக்கத்தில் எந்த பதிவையும் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதற்கு காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் மாதம்  ரிலீஸ் ஆவது தான் காரணம் என கூறப்படுகிறது.


 சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில்  நடிகர் ரஜினிகாந்தும், இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும்  “ஜெயிலர்” படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தில் நடிகைகள் தமன்னா, மயா கிருஷ்ணன், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி, நடிகர் யோகிபாபு, மலையாள நடிகர் விநாயகன், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகலாம் என கூறப்படுகிறது. 


முன்கூட்டியே வரும் மாவீரன் 


திரையுலகைப் பொறுத்தவரை முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானால், பிற படங்கள் தங்கள் படங்களை முன்கூட்டியோ அல்லது மற்றொரு தேதியில் வெளியிடுவதோ வழக்கம். அப்படியான நிலையில் ஒருவேளை ஜெயிலர் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.