இயக்குநரும் நடிகருமான மனோபாலாவின் மறைவு திரையுலகத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இசைஞானி இளையராஜா மனோபாலாவின் இறப்புக்கு தனது இரங்கலை ஒரு வீடியோ பதிவாக ட்விட்டரில் வெளியிட்டு இருந்தார். அதில் அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பலரும் அதற்கு கண்டனம்  தெரிவித்து வந்த நிலையில் அது மேலும் வலுவடைந்து வருகிறது.


மனோபாலா மறைவு :


தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும், குணச்சித்திர நடிகருமான மனோபாலா கல்லீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு இரண்டு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். அவரின் மறைவு செய்தி கேட்டு நேரில் சென்றும் பல பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டனர்.


 



 


இளையராஜா இரங்கல் :


அந்த வகையில் இசைஞானி இளையராஜா தனது ட்விட்டர் பக்கம் மூலம் வீடியோ பதிவில் மனோபாலாவிற்கு இரங்கலை தெரிவித்துக் கொண்டார். அதில் அவர் பேசியது "என் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த நண்பர், இயக்குனர் நடிகருமான மனோபாலா மறைவு செய்தி கேட்டு மிகவும் துயரம் அடைந்தேன். வீட்டில் இருந்து கோடம்பாக்கம் கிளம்பும் நேரத்தில் அதை அறிந்து கொண்டு எனக்காக கோடம்பாக்கம் மேம்பாலத்தில் காத்திருந்த எத்தனையோ இயக்குநர்களில் மனோபாலாவும் ஒருவர். அடிக்கடி ரெக்கார்டிங் சமயத்தில் சந்திக்கும் போது பல விஷயங்களை பற்றி பேசி என்னை மகிழ்ச்சியடைய செய்வார்" என பேசியிருந்தார். 


தற்பெருமை பேசிய இளையராஜா :


தனக்கும் மனோபாலாவிற்கும் இடையில் இருந்த நட்பையும் தொடர்பையும் விளக்கி சொல்வதாக கருதி அவர் பேசிய இந்த வீடியோ பதிவு சோசியல் மீடியாவில் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்கும் போது இறந்தவரின் பெருமையை பற்றி பேசுவது தான் பெருந்தன்மை ஆனால் இறந்தவரை கொச்சைப்படுத்தி தன்னை பற்றி பெருமையாக பேசுவது ஒரு பெரிய மனுஷனுக்கு அழகா? என பலரும் அவரவரின் கண்டனங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். இதனால் இளையராஜா பேசிய சர்ச்சையான பதிவு மேலும் வலுப்பெற்று வருகிறது. 


மருத்துவர் மற்றும் நடிகை ஷர்மிளா தனது ட்விட்டர் பக்கத்தில் இளையராஜாவின் இந்த டீவீட்டுக்கு "இசையில் ஞானி.. ஆனால் இங்கீதத்தில்" என ட்வீட் செய்துள்ளார். இப்படி பலரும் மிகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.