சம்பள பாக்கி தொடர்பான விவகாரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்ததற்கு ரூ.4 கோடி சம்பள பாக்கி உள்ளதாக ஞானவேல் ராஜாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருதரப்பினரும் சமரசம் ஏற்படுத்தி கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
என்ன பிரச்சனை..?
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சிவகார்த்திகேயன். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ’மிஸ்டர் லோக்கல்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளத்தை முழுமையாக அளிக்கவில்லை என்ற புகார் எழுந்தது.
இதையடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் தயாரிப்பாளர் ஞானவேல்ராவுக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், சம்பள பாக்கி ரூ. 4 கோடியை தர உத்தரவிட வேண்டும் என்றும், மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்ததிற்காக பேசப்பட்ட ரூ. 15 கோடி சம்பளத்தில் ரூ. 11 கோடி மட்டுமே ஞானவேல்ராஜா வழங்கியதாக மனுவில் தெரிவித்திருந்தார்.
மிஸ்டர் லோக்கல்:
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவான திரைப்படம் மிஸ்டர் லோக்கல். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் கடந்த 2019 ம் ஆண்டு மே மாதம் வெளியானது. ஆனால், படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.