தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் வர்த்தகத்தையும் ஏற்படுத்தி கோலிவுட்டின் முக்கியமான கதாநாயகனாக இருப்பவர். இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்னர் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார். இதன் மூலம் தனக்கென தமிழ்நாடு முழுவதும் தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி இருந்தார். விஜய் டீவியில் தொகுப்பாளராக பணியாற்றிக்கொண்டே, கடந்த 2012ஆம் ஆண்டு இயக்குநர் பாண்டிராஜனின் மெரினா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் சிறிய பட்ஜெட் படங்களில் நடித்தது மட்டும் இல்லாமல் பெரும்பான்மையான மக்களை சிரிக்க வைக்கக்கூடிய காமெடி கண்டண்ட் படங்களிலேயே நடித்து வெற்றிப்படங்களைக் கொடுத்து வந்தார். 


சிவகார்த்திகேயன் இதுவரை 20 படங்களில் நடித்துள்ளார். இந்த 20 படங்களில் சிவகார்த்திகேயனுக்கு வெற்றிப் படங்கள்தான் அதிகம். ஒரு சில படங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும் முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை. தொடக்க காலத்தில் காமெடி கதைகளை தேர்வு செய்து நடித்துவந்த சிவகார்த்திகேயன், அதன் பின்னர் சீரியசான மற்றும் வித்தியாசமான ஜனரஞ்சக படங்களில் நடிக்கத் தொடங்கினார்.


தற்போது சிவகார்த்திகேயன் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை வரலாற்றுப் படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்திற்கு அமரன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு ராணுவ வீரரைப் போல் மிடுக்கான தோற்றத்திற்கு அதிகப்படியான உடற்பயிற்சியில் சிவகார்த்திகேயன் ஈடுபட்டுள்ளார். அமரன் படத்தினை உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கின்றது. 


சிவகார்த்திகேயன் படத்தில் நடிப்பது மட்டும் இல்லாமல் பாடல் எழுதுவது, பாடல் பாடுவது மற்றும் படங்களைத் தயாரிப்பது என சினிமாவின் பல்வேறு துறைகளிலும் தனது கவனித்தினை செலுத்தி வருகின்றார்.  சிவகார்த்திகேயனுக்கு தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் மட்டும் இல்லாமல், குழந்தைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் குறிப்பாக தாய்மார்கள் என அனைத்து வகை வயதினரும் ரசிகர்களாக உள்ளனர். சிவகார்த்திகேயன் சினிமாவில் இன்றைக்கு அடைந்துள்ள உயரம், சந்திக்கும் வெற்றி அவரது அனைத்து ரசிகர்களுக்கும் தங்களில் ஒருவரது வெற்றி, தங்களது குடும்பத்தில் ஒருவரது வெற்றி என்ற பார்வையை ஏற்படுத்தியுள்ளது. 


இந்நிலையில் சென்னையில் ரசிகர்களைச் சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன், மனம் திறந்து அவர்கள் உருக்கமாகப் பேசியுள்ளார். அதில், ”எனது சினிமா வாழ்க்கையில் அதிகப்படியான பிரச்னைகள், வலிகள் உள்ளது. அதனைப் பகிர்ந்துகொள்ள எனக்கு அப்பாவோ, அண்ணனோ இல்லை. ஆனால் அப்படியான காலங்களில் எனது ரசிகர்களான நீங்க இருந்தீங்க. இன்னுமும் இருப்பீங்க” எனப் பேசினார். சிவகார்த்திகேயன் இவ்வாறு பேசும்போது அவரது ரசிகர்கள் ஆரவாரமெழுப்பி சிவகார்த்திகேயனுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.