சின்னத்திரத்தில் ஒரு காமெடி நிகழ்ச்சி மூலம் முதன் முதலில் அடியெடுத்து வைத்த ஒரு கலைஞன் பின்னாளில் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக அதுவும் மிக குறுகிய காலத்திலேயே வளர்ச்சியடைவார் என்பது அவரே கூட நினைத்து பார்த்திராத ஒரு கனவு. ஆனால் அதை தனது விடாமுயற்சியாலும், கடிமான உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையாலும் சாதித்து காட்டியவர் நடிகர் சிவகார்த்திகேயன். இன்றோடு இந்த நடிகர் திரை பயணத்தை தொடங்கி 11 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். 


 



கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கியவர் :


சின்னத்திரை டூ வெள்ளித்திரை பயணித்து மாபெரும் வெற்றி பெற்ற கலைஞர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானது 2012ம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'மெரினா' திரைப்படம் மூலம் தான். அதற்கு முன்னர் ஒரு சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் முகம் காட்டி இருந்தாலும் அவரின் நடிப்பின் மீது நம்பிக்கை வைத்து ஒரு ஹீரோவாக வாய்ப்பு கொடுத்த முதல் இயக்குநர் பாண்டிராஜ்.


அதனை தொடர்ந்து அவர் நடித்த ஒவ்வொரு படத்திலும் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி கொண்டு வெற்றியின் உச்சத்திற்கு சென்றவர். இன்றைய தலைமுறையினர் நடிகர் சிவகார்த்திகேயனின் அபார வளர்ச்சியை கண்கூடாக பார்த்து பிரமித்துள்ளனர். பல இளைஞர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு முக்கியமான ஆதாரம் அவர் மீது அவருக்கு இருந்த நம்பிக்கை. 


 






நம்ம வீட்டு பிள்ளை :


குழந்தைகள், இளைஞர்கள், இல்லத்தரசிகள், பெரியவர்கள் என அனைவரின் ஃபேவரட் ஹீரோவாக திகழும் சிவகார்த்திகேயன் ஒரு ஸ்டார் நடிகர் என்பதை காட்டிலும் நமது வீட்டில் இருக்கும் ஒரு மகன், சகோதரன், நண்பன் என ஒரு சக மனிதர் என்ற உணர்வோடு தான்  கொண்டாடப்படுகிறார். 


சாமர்த்தியசாலி சிவா:


ஒரு நடிகராக மட்டும் வளர்ச்சியடையாமல் பாடலாசிரியர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முக கலைஞராக திறம்பட தனது திறமைகளை வளர்த்து கொண்ட இந்த கலைஞன் தனது பிளஸ் பாயிண்ட்களை கச்சிதமாக அறிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு அடியையும் சாமர்த்தியமாக நகர்த்தி முன்னணி நடிகர்களின் லிஸ்டில் இடம் பெற்றுவிட்டார். ஆயிரங்களில் சம்பளம் கிடைக்குமா? என ஏங்கிய காலம் போய் இன்று கோடிக்கணக்கில் தனது சம்பளத்தை 10 ஆண்டுகளில் உயர்ந்ததற்கு முக்கியமான காரணம் அவரின் உழைப்பும் திறமையும் மட்டுமே. 


 






நடிகர் சிவர்கார்த்திகேயனின் 11 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக அவர் தற்போது நடித்து வரும் 'மாவீரன்' படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.