நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு பேமிலி ஆடின்ஸை டார்கெட் செய்து ரிலீசான படம் அயலான். இந்த படம் ஜனவரி 12ஆம் தேதி ரிலீசானது. ஏலியன் கதாப்பாத்திரத்தை மையப்படுத்தி வந்த இந்தப் படம் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டும் சி செண்டர் ஆடியன்ஸ் மத்தியிலும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்துடன் பொங்கலுக்கு தனுஷின் கேப்டன் மில்லர், அருண் விஜயின் மிஷன், விஜய் சேதுபதியின் மெரி கிருஸ்துமஸ் ஆகிய படங்களும் ரிலீசாகின.




இந்தப் படத்தின் வசூல் குறித்து பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளைப் பகிரும் இணையதளங்கள் தகவல்கள் வெளியிட்டு வந்தாலும், தற்போது படக்குழு இரண்டாம் முறையாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினைப் பகிர்ந்துள்ளது. அதன்படி அயலான் திரைப்படம் ஜனவரி 23ஆம் தேதி வரை உலகம் முழுவதிலும் ரூபாய் 75 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை சிவகார்த்திகேயன் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் 'அயலான்'.


ஏலியன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், ரகுல் ப்ரீத், கருணாகரன், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சித்தார்த் ஏலியனுக்கு குரல் கொடுத்திருந்தார்.  ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.


இந்த ஆண்டு பொங்கல் வெளியீடாக கடந்த ஜனவரி 12ஆம் தேதி அயலான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. குழந்தைகளைக் குறிவைத்து அயலான் திரைப்படம் எடுக்கப்பட்ட நிலையில், எதிர்பார்த்தபடியே குழந்தை ஆடியன்ஸை குடும்பத்துடன் ஈர்த்து இப்படம் கல்லா கட்டி வருகிறது. முதல் நான்கு நாள்களிலேயே அயலான் திரைப்படம் ரூ.50 கோடிகளை உலகம் முழுவதும் வசூலித்ததாக கூறப்பட்டது. 


இந்நிலையில், அயலான் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு பற்றிய தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி அயலான் படத்தின் ஓடிடி உரிமையை சன் நெக்ஸ்ட் நிறுவனம் பெற்றுள்ளதாகவும்,  வரும் பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து படக்குழு எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காத நிலையில், பிப்ரவரி முதல் வாரத்தில் அறிவிப்பு வரும் என்றும் கூறப்படுகிறது.


அயலான் படத்திற்கு வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் அமைத்த ஃபாண்டன் எஃப்.எக்ஸ் நிறுவனம் அயலான் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு படக்குழுவுடன் போட்டுள்ள ஒப்பந்த அறிக்கையை தற்போது வெளியிட்டது. இந்த அறிக்கையில் அயலான் படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கு தங்களது நிறுவனம் முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்று உத்தரவாதம் கொடுத்துள்ளது. மேலும் அயலான் படத்தின் இரண்டாம் பாகத்தில் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் மட்டுமே முதற்கட்டமாக ரூ.50 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.  படத்தின் தரத்தை மேம்படுத்த இந்த செலவு அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் அப்படி நிலவும் பட்சத்தில் அது மேற்கொண்டு தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வேலைகள் அனைத்தும் ஃபாண்டம் நிறுவனத்தின் உரிமையாளர் பிஜாய் அற்புதராஜின் தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்து ஒரு படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது இதுவே முதல் முறை என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.