சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடித்து உருவாகி இருக்கும் அயலான் (Ayalaan) திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. நேற்று சென்னையில் நடைபெற்ற அயலான் டீசல் வெளியீட்டு நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் ரவிக்குமார் தனது முதல் படத்திற்கும் இரண்டாவது படத்திற்கும் இடையிலான மிக நீண்ட இடைவேளி குறித்து பேசினார்.


ரவிக்குமார்


கடந்த 2015ஆம் ஆண்டு இயக்குநர் ரவிக்குமாரின் முதல் படமான ‘இன்று நேற்று நாளை’ திரைப்படம் வெளியாகியது. விஷ்ணு விஷால் கருணாகரன், உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். ஹிப்ஹாப் தமிழா இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். டைம் டிராவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. டைம் டிராவல் என்கிற சிக்கலான கான்செப்டை அனைவருக்கும் பிடித்த மாதிரி உணர்வுகள் கலந்து எடுத்திருந்ததே இந்தப் படத்தை அனைவருக்கும் கொண்டு சேர்த்தது.


அயலான்


இதனைத் தொடர்ந்து ரவிக்குமாரின் அடுத்த படத்தை மக்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வந்த நிலையில்தான் அயலான் திரைப்படத்தின் அப்டேட் வெளியானது. ஆனால் பல்வேறு பட்ஜட் நெருக்கடிகளால் பல ஆண்டுகளாக இந்தப் படத்தின் வேலைகள் தாமதமாகி வந்தன. தனது முதல் படத்துக்கும் இரண்டாவது படத்துக்கும் இடையில் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளை கடந்துள்ளார் இயக்குநர் ரவிகுமார்.


தமிழ் சினிமாவில் வெகு சில இயக்குநர்களே இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் படங்களை இயக்கி வெற்றியும் பெற்றுள்ளார்கள். நேற்று சென்னையில் அயலான் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டார்கள். அப்போது பேசிய இயக்குநர் ரவிக்குமார் தனது எட்டு ஆண்டுகால காத்திருப்பைப் பற்றி பேசினார்.


எட்டு வருட காத்திருப்பு


இந்த எட்டு ஆண்டு காலக்கட்டத்தைப் பற்றி எல்லாரும் பேசுகிறார்கள். இந்த காலக்கட்டம் வெளியுலகத்தில் ஒரு மாதிரி தெரிகிறது. நான் இந்தக் காலக்கட்டத்தை திடமாக கடந்து வருவதற்கு எனக்கு உரமாக இருந்தது என்னுடைய குடும்பமும் என்னுடைய நண்பர்களும் தான்.


இது எல்லாவற்றுக்கும் மேல் எனக்கு மிகப் பெரிய நம்பிக்கையாக இருந்தவர் சிவகார்த்திகேயன். மலையேறுபவர்கள் என்னதான் திறமையானவர்களாக இருந்தாலும் அவர்கள் சறுக்கினால் கீழ் விழாமல் இருப்பதற்காக ஒரு கொக்கி அடித்து வைப்பார்கள். அந்த மாதிரி நான் கீழே விழாமல் இருக்க எனக்கு கொக்கியாக இருந்தவர் சிவகார்த்திகேயன்.


நான் இந்த ஆண்டுகளை கடக்கவே இல்லை. நான் ஒவ்வொரு நாட்களாக கடந்தேன் அது மொத்தமாக சேர்ந்து பார்க்கும் போது ஆண்டுகளாக தெரிகிறது. கொரோனா வந்து இந்தப் படத்தின் இரண்டு ஆண்டுகளை எடுத்துக் கொண்டது. எல்லாப் படத்தையும் போல் இந்தப் படமும் நடந்தால் எட்டு மணி நேரம் தூரம் தான். ஆனால் இந்தப் படம் நடக்கவில்லை. காலக்கட்டம் அதிகமாக இருந்தாலும் இந்த இடைப்பட்ட காலத்தில் எங்களுடன் இருந்த ஆதரவு கொடுத்த தொழில்நுட்பக் கலைஞர்கள்.


ஒரு வரியை நம்பினார்


எனக்கு இது இரண்டாவது படம். என்னுடைய முதல் படத்தை ஒரு சின்ன பட்ஜட்டில் எடுத்திருந்தேன். என்னுடைய இரண்டாவது படம் கிட்டதட்ட தெருவில் விளையாடிக் கொண்டிருந்தவன் நேரடியாக ஸ்டேடியத்தில் விளையாடச் சென்றது மாதிரிதான். இன்று நீங்கள் பார்க்கும் தரத்தில் நான் சிவகாத்திகேயனிடம் இந்தப் படத்தின் கதையை சொல்லவில்லை. நான் அவரிடம் இந்த கதையின் ஒரு வரியை மட்டுமே சொன்னேன். அதை அவர் எப்படி இவ்வளவு நம்பினார் என்பது எனக்கு அச்சரியமாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.