அயலான்


ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் (Ayalaan) திரைப்படம் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகியுள்ளது. ரகுல் ப்ரீத், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். அயலான் படம் ஃபேமிலி ஆடியன்ஸ் குறிப்பாக குழந்தைகளை அதிகம் கவர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் ஏலியன். இந்த ஏலியனுக்கு நடிகர் சித்தார்த் டப்பிங் கொடுத்துள்ளார். மேலும் இந்த ஏலியனுக்கு டூப் போட்ட நடிகர் வெங்கடேஷ் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.




ஏலியனாக மாறிய வெங்கடேஷ்




அயலான் படத்தில் ஏலியன் காட்சிகள் முழுக்க முழுக்க வி.எஃப். எக்ஸ் செய்யப்பட்ட காட்சிகள். இந்தப் படத்தில் மொத்தம் 4850 வி.எஃப் .எக்ஸ் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் படத்தில் ஏலியனுடன் பிற நடிகர்கள் நடிக்கும் காட்சிகளில் ஏலியனுக்கு பதிலாக வெங்கடேஷ் என்கிற நடிகர் நடித்துள்ளார். இந்தக் காட்சிகளில் அவரது நடை, உடல்மொழி ஆகியவை பதிவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. ரசிகர்கள் அனைவரும் பார்த்து ரசிக்கும் ஏலியனுக்கு பின் உள்ள முகம் தெரியாத நடிகர் வெங்கடேஷ், அயலான் படத்தில் நடித்த அனுபவத்தை தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.


படத்துல இருந்து போகாததற்கு இதுதான் காரணம்




”அயலான் தான் எனக்கு முதல் படம். இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன் ரியாலிட்டி ஷோஸ் செய்து கொண்டிருந்தேன். ஒவ்வொரு ஆஃபிஸ் ஆபிஸாக சென்று புகைப்படங்கள் கொடுத்து வருவேன். அப்போது தான் அயலான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இந்தப் படத்தில் என்னுடைய முகம்  திரையில்  தெரியாது என்று இயக்குநர் முன்பாகவே சொல்லிவிட்டார்.


நடிக்க தேர்வான பிறகு கூத்துப்பட்டறையைச் சேர்ந்த பிரளயன் என்பவர் எனக்கு நடிக்க பயிற்சி கொடுத்தார். இந்தப் படத்திற்காக மொத்தம் 110 நாட்கள்  நடித்திருக்கிறேன். ஒரு வருடத்தில் இந்தப் படம் வெளியாகி விடும் என் பெயர் ஓரளவிற்கு வெளியே தெரியும் என்கிற நம்பிக்கையில் நான் இருந்தேன். ஆனால் கொரோனா நோய்த்தொற்று இன்னும் நிறைய சிக்கல்கள் ஏற்பட்டதால் இந்தப் படம் வெளியாக 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.


இந்த ஐந்து ஆண்டுகாலம், சினிமாவைப் பற்றிய  நிறைய விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்தது.  படத்தில் சிவகார்த்திகேயன், நிரவ் ஷா, ரவிக்குமார், யோகிபாபு இவர்களுடன் வேலை செய்வது எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. நான் நடித்த காட்சிகளைப் பார்த்து தான் ரஹ்மான் சார் பின்னணி இசை அமைத்தார் என்று இயக்குநர் என்னிட சொன்னபோது  ரொம்ப பெருமையாக இருந்தது.


இயக்குநர் ரவிக்குமாரிடம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். செட்டில் அவர் சத்தமாக கூட பேசமாட்டார். அவரிடம் இருந்த தெளிவு தான்  படம் எவ்வளவு  தாமதானாலும் அதை பாதியில் விட்டுவிட்டு போகாமல் இருக்க எனக்கு மிகப்பெரிய  ஊக்கமாக அமைந்தது” என்று வெங்கடேஷ் கூறியுள்ளார்.