நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக, மிமிக்ரி கலைஞராக தனது பயணத்தை தொடங்கி இன்று தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு நடிகராக வலம் வருகிறார். தொடர்ந்து தனது படங்களை கவனமுடன் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவரின் புதிய படம் ஒன்று பற்றி தகவல் வெளியாகியுள்ளது. 


கடந்த 2022 ஆம் ஆண்டு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சமுத்திரகனி, சூரி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் “டான்”. அனிருத் இசையமைத்த இப்படம் சிவகார்த்திகேயன் கேரியரில் ரூ.100 கோடி வசூலித்த 2வது படம் என்ற பெருமையை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அவர் நடித்த பிரின்ஸ், அயலான் படங்கள் எதிர்பார்த்த அளவில் பெரிய அளவில் செல்லவில்லை. மாவீரன் படம் மட்டுமே வெற்றி பெற்றது.  இதனால் அடுத்து ஒரு வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் சிவகார்த்திகேயன் உள்ளார். 


இப்படியான நிலையில் டான் இயக்குநர் சிபி சக்கரவர்த்தியுடன் மீண்டும் அவர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திலும் எஸ்.ஜே.சூர்யா மிக முக்கியமான கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும், ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா இடம் பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் 


நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக “அமரன்” என்ற படத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரித்துள்ள  இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படத்தில் சாய் பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தியதாகும். இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸூடன் சிவகார்த்திகேயன் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். மேலும் வில்லன் கேரக்டரில் வித்யூத் ஜம்வால், டான்ஸிங் ரோஸ் ஷபீர் ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.