அமரன்


சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியானது. மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுபி உருவான இப்படம் இந்த ஆண்டில் ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்தது. 30 நாட்களுக்கும் மேலாக திரையரங்கில் ஓடி உலகளவில் ரூ 328 கோடி வசூல் ஈட்டியது அமரன். நேற்று டிசம்பர் 4 ஆம் தேதி இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி மேலும் பல பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது. 


அமரன் பட செல்ஃபோன் சர்ச்சை


 சென்னையை சேர்ந்த பொறியியல் மாணவர் விவி வகீசன். இவருடைய செல்போன் நம்பர் அமரன் திரைப்படத்தில் இந்துவாக நடித்திருந்த சாய் பல்லவியின் நம்பராக திரையில் காட்டப்பட்டது. இதனால் தினமும் பலர் தனக்கு விடாமல் போன் செய்து சாய் பல்லவியிடம் கொடுக்க சொல்லுமாறு கூறுவதாக கடந்த மாதம் புகார் தெரிவித்திருந்தார் வகீசன்.


சாய் பல்லவி நம்பர் என தன்னுடைய செல்போன் நம்பரை திரையில் காட்டியதால் தனக்கு விடாமல் அனைவரும் போன் அடித்து தொந்தரவு செய்தவாகவும் இதனால் தன்னுடைய இயல்பு வாழ்க்கை பாதிப்பதாக அந்த மாணவன் கூறியிருந்தார். இரவு பகலாக விடாமல் தனக்கு அழைப்பு வந்ததால் கடுப்பாகியுள்ளார் வகீசன். இந்த விவகாரம் குறித்து அமரன் திரைப்படக்குழுவுக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பி ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டார் வகீசன். இந்த வழக்க இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.


செல்ஃபோன் நம்பரை நீக்கிய படக்குழு


அமரன் திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள நிலையில் படத்தில்   இருந்து சாய் பல்லவி செல் ஃபோன் நம்பர் நீக்கப்பட்டுள்ளது. படக்குழுவிடம் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு மாணவர் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது. ஆனால் கடந்த ஒரு மாத காலமாக அமரன் படக்குழுவால் ரசிகர்களின் தொந்தர்வுக்கு ஆளான வகீசனிடம் படக்குழுவினர் தனிப்பட்ட ரீதியாக மன்னிப்பு எதுவும் கேட்காதது ஏமாற்றமே.