சித்தார்த்


என் ராஜசேகர் இயக்கத்தில்  நடிகர் சித்தார்த் , ஆஷிகா ரங்கநாத் நடித்துள்ள படம் மிஸ் யூ. ஜே.பி, பொன்வண்ணன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், 'லொள்ளு சபா' மாறன், சஸ்டிகா என பலரும் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருந்தது. பின் கடும் மழை காரணத்தினால் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. வரும் டிசம்பர் 13 ஆம் தேதிக்கு படத்தின் ரிலீஸ் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு நடிகர் சித்தார்த் கோபமாக பதில் தெரிவித்தது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. 


நான் சினிமாவில் இல்லையா ?


சமீபத்தில் நீங்கள் தமிழ் சினிமாவில் அதிகம் இல்லை என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார் " கொஞ்ச நேரம் முன்னாள தான் அதிக சம்பளம் வாங்குனாதான் கருத்து சொல்லனும்னு சொன்னாங்க. நான் கருத்து சொல்லல அதுக்காக நான் கம்மி சம்பளம் வாங்குறேனு அர்த்தமா..? நான் தமிழ் சினிமால இல்லனு நீங்க எப்படி சொல்லலாம். இந்தியன் 2 எல்லாம் உங்களுக்கு படமா தெரியலையா. அந்த படத்தைப் பற்றி நீங்க பேசல .ஆனால் எங்க வீட்டில பேசினாங்க. நல்லா நடிச்சடா. கமல் சார் கூட சூப்பரா நடிச்ச..சங்கர் சார் கூட ரெண்டு படம் பண்ணிட்ட என்று சொன்னார்கள். நான் ஜெயிச்சுட்டு இருக்கேன் ஆனா நீங்க நான் சினிமாவில் இல்லனு சொல்றீங்க. நான் தமிழ் சினிமால தான் இருக்கேன். என் வீடு இங்க தான் , இங்கதான் வரி கட்டுறேன் , இந்த தான் படம் தயாரிக்கிறேன். நான் சினிமாவில் இல்லை என்று சொல்றீங்க . என்னால நம்பவே முடியல. நான் அப்புறமா பேசுவோம் நீங்க தப்பான புரிதல்ல இருக்கீங்க" என்று சித்தார்த் பேசினார்.