தொகுப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கி தமிழ் திரையுலகில் துணை நடிகர், பின்னர் காமெடி ஹீரோவாக நடிக்கத் தொடங்கி இன்று நல்ல நடிகராக வளர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன். திரை பின்னணி இல்லாமல் திரைத்துறைக்குள் வந்து இன்று முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.


காமெடி நாயகன்:


தன்னையும், தன் திறமையும் வளர்த்துக் கொண்டு திரைத்துறையில் நம்ம வீட்டுப் பிள்ளையாக வளர்ந்து வந்த சிவகார்த்திகேயன் கோட் படத்தில் விஜய்யிடம் இருந்து துப்பாக்கியை பெற்றுக்கொள்ளும் காட்சி அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்தாலும், கடும் விமர்சனத்தையும் எதிர்கொள்ள வைத்தது.


மெரினா படம் மூலமாக நாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன் கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் வரையிலும் முழு நீள நகைச்சுவை நாயகனாகவே நடித்து வந்தார். அவரது கேரியரை உச்சத்திற்கு கொண்டு சென்றது வருத்தப்படாத வாலிபர் சங்கம். காமெடியில் அசத்தும் கதாநாயகனாக பட்டி தொட்டி எங்கும் சென்று சேர்ந்தவருக்கு மான் கராத்தே, காக்கி சட்டை. ரஜினி முருகன் படம் இன்னும் புகழ் சேர்த்தது.


காமெடியில் மட்டும் அசத்தியவரை முதன்முறையாக முழு நீள காதல் நாயகனாக காட்டியது ரெமோ. அதுவரை இல்லாத அளவிற்கு கலர்புல் காதல் நாயகனாக நடித்திருந்தார். அதன்பின்பு, சீமராஜா, மிஸ்டர் லோக்கல்,  பிரின்ஸ் என்ற தோல்விப்படங்கள் அளித்தாலும் டாக்டர் படத்தில் மாறுபட்ட காமெடி தோற்றத்தில் நடித்திருந்தார்.


அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்ற அமரன்:


நம்ம வீட்டுப் பிள்ளை படம் மூலமாக ஒரு நல்ல நடிகராக குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாக மாறினார். பின்னர், மாவீரன் படத்தில் ஒரு நல்ல நடிகராக தேறிய சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் ஒரு படம் தேவைப்பட்டது. அதுவும் கோட் படத்தில் விஜய்யிடம் இருந்து துப்பாக்கியை பெறும் காட்சியில் நடித்த பிறகு அதை தக்க வைக்க அவருக்கு ஒரு மிகப்பெரிய வெற்றி தேவைப்பட்டது.


ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளராக திரையுலகில் உள்ளே வந்த சிவகார்த்திகேயன் மிமிக்ரி திறமையை மட்டுமின்றி நடிப்புத் திறமையையும். நடனத் திறமையையும் நன்றாகவே வளர்த்துக் கொண்டார். அது அவருடைய கடந்த கால படங்களைப் பார்க்கும்போது புரிந்து கொள்ள முடியும். ஆனால். அவரை அடுத்த பரிணாமத்திற்கு கொண்டு சென்ற திரைப்படமாக அமைந்திருப்பது அமரன் படம் ஆகும்.


கண்ணீர் சிந்திய ரசிகர்கள்:


ராணுவத்திற்காக வீரமரணம் அடைந்த மறைந்த மேஜர் முகுந்தனின் வாழ்க்கையை போற்றும் இந்த படத்தில் மேஜர் முகுந்தனாக அதியற்புதமான நடிப்பை மாணவர், ராணுவ வீரர், மனைவிக்கு நல்ல கணவர் என்று ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கனக்கச்சிதமாக நடித்திருப்பார் சிவகார்த்திகேயன். இந்த படம் சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது என்பதற்கு மிகச்சிறந்த சான்று படம் பார்த்த அனைவரும் படத்தைப் பார்த்த பிறகு கண்ணீருடன் திரையரங்கை விட்டு வெளியேறுவதுதான் இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும்.


மேஜர் முகுந்தன் மறைந்தபோது கண்ணீர் சிந்திய கண்களை காட்டிலும் இன்று அவரது வாழ்க்கை வரலாற்றை சிவகார்த்திகேயன் நடிப்பின் வழியே பார்த்து கண்ணீர் சிந்திய கண்கள் பன்மடங்கு அதிகம் ஆகும். அப்படி ஒரு பெருமையை ராணுவ வீரருக்கு சேர்த்த சிவகார்த்திகேயனுக்கு அமரன் படத்தில் அந்த ராணுவ வீரரின் கதாபாத்திரத்தில் நடித்ததே வாழ்நாள் பெருமை ஆகும்.


சிவகார்த்திகேயன் தான் இனி அடுத்தடுத்து நடிக்கும் படங்கள் மூலமாக தன்னுடைய அடுத்த கட்ட பரிணாமத்தை தக்க வைப்பதுடன் தன்னை தனித்துவமிக்க நடிகராக வளர்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம் ஆகும். அப்பொழுதுதான் நடிகர் விஜய்யிடம் இருந்து துப்பாக்கியை பெறும் காட்சியில் கிடைத்த விமர்சனத்திற்கு அவர் தரும் பதிலடியாக அது அமையும்.