சிவகார்த்திகேயன்


விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக தனது கரியரைத் தொடங்கி இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். எளிய குடும்ப பின்னணியில் இருந்து சினிமாவில் வந்து சாதிக்கும் கணவுடன் இருக்கும் பலருக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக எஸ்.கே இருக்கிறார். சிவகார்த்திகேயன் தனது முறை பெண்ணான ஆர்த்தியை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சினிமாவில் பெரிதாக சாதிக்கும் முன்பாகவே திருமணம் செய்துகொண்டவர் சிவகார்த்திகேயன். இதுகுறித்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது. 


மாமனார் பற்றி சிவகார்த்திகேயன்


நடிகர் முரளியின் மகன் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து நடித்துள்ள நேசிப்பாயா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் தனது மாமனாரைப் பற்றி எஸ்.கே இப்படி பேசினார்.  " எனக்கு ஏன் மாமனார் ரொம்ப ஸ்பெஷல். எனக்கு பொண்ணு கொடுத்ததே பெரிய விஷயம். என்னுடைய சொந்த தாய் மாமா தான் அவர் என்றாலும் அன்று எனக்கு நிரந்தரமான வேலை எதுவும் இல்லை . விஜய் டிவியில் ஒரு எபிசோட் பண்ணால் 4500 ரூ சம்பளம் கிடைக்கும். இன்று விஜய் டிவி பெரியளவில் வளர்ந்திருக்கிறது. ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க லட்சக் கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் எனக்கு என் மாமா தான் முழு ஆதரவு கொடுத்தது. அவன் ஏதோ ஒன்னு பண்ண நினைக்கிறான். நீ தைரியமா பண்ணு நாங்க சப்போர்ட் பண்றோம்னு என்னுடைய மாமா தான் எனக்காக பேசினார். இந்த மேடையில் நான் என்னுடைய மனோகர் மாமாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" 






எஸ்.கே 25


சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் எஸ்.கே 25 படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. அதர்வா , ஜெயம் ரவி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். டான் பிக்ச்சர்ஸ் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார்.