Sivaji Ganesan Birthday: நடிகர் திலகம் என அழைக்கப்படும் சிவாஜி கணேசனின் பிறந்த நாளை ஒட்டி நடிகர் கமல்ஹாசன் நாயகன் திரைப்படத்தின் புகைப்படத்தை பகிர்ந்து நினைவுகளை பகிர்ந்து கொண்டார். 


சிவாஜியின் பிறந்த நாள்:


நாடக கலைஞராக இருந்த சிவாஜி, பராசக்தி படத்தின் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். கேரக்டருக்கு ஏற்றவாறு அனைத்து முகபாவங்களையும், உடல்மொழியையும் காட்டி நடிக்கும் சிவாஜி நடிகர் திலகம் என அழைக்கப்படுகிறார். இவரது நடிப்பை பாராட்டி பத்ம ஸ்ரீ விருது, பத்ம பூஷண் விருது, தாதா சாகிப் பால்கே உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டதுடன், ஒவ்வொரு ஆண்டும் சிவாஜி கணேசன் பிறந்த நாள் தமிழக அரசு சார்பில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 


ஒற்றை மனித கலைமகன்:


இந்த நிலையில் இன்று சிவாஜியின் 96வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. சிவாஜியின் பிறந்த நாளை ஒட்டி திரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் சிவாஜியுடன் நடித்த நினைவுகளை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார். அவர் வெளியிட்ட பதிவில், “பல நூறு மனிதர்களைத் தனக்குள்ளிருந்து எடுத்து உலகத்துக்குத் தந்த ஒற்றை மனிதக் கலைமகன். நடிப்பாக அல்ல, வாழ்க்கையாகக் கலையை முன்வைத்தவர். உலகின் சிறந்த நடிகர்களுக்கு, தமிழ்நாட்டின் பதில் என்று சொல்லத் தக்கவர், மாபெரும் நடிப்புக் கலைஞர் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் இன்று. வாழ்த்துவது நமக்குப் பெருமை” என கூறியுள்ளார். 






முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “ முத்தமிழறிஞர் கலைஞரின் கனல் தெறிக்கும் வசனங்களை அனல் பறக்கத் தமது சிம்மக் குரலால் பேசி, ரசிக நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்த “நடிகர் திலகம்” அவர்களின் 96-ஆவது பிறந்தநாள் இன்று..! நடிப்பின்  இமயமாய், தமிழர்களின் கம்பீரமான கலையுலக அடையாளமாய் என்றென்றும் உயர்ந்து நிற்கும் "நடிகர் திலகம்" சிவாஜி கணேசன் அவர்களின் புகழ், தரணியும், தமிழும் உள்ளவரை என்றென்றும் நிலைத்திருக்கும் “ என கூறியுள்ளார். 






மேலும் படிக்க: Thalaivar 170 Squad: இதுதான் சூப்பர்ஸ்டார் படத்தின் ஸ்குவாட்...தலைவர் 170 படத்தின் படக்குழு அறிவிப்பு


13 years of Endhiran : உச்சகட்ட வி.எஃப்.எக்ஸ்... தமிழில் சாகச படங்களின் முன்னோடி... பிரம்மாண்டங்களின் கூட்டணியில் உருவான 'எந்திரன்' வெளியான நாள்!