தமிழ் சினிமாவின் பிரமாண்டமான இயக்குநருடன் பிரமாண்டமான நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான பிரமாண்டமான வெற்றி படம் 'எந்திரன்'. ஹீரோயினாக என்றுமே இளமை ததும்பும் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஏ.ஆர். ரஹ்மான் இசை என ஒட்டுமொத்த திரையுலகின் பிரம்மாண்டமே ஒன்று சேர்ந்த இப்படம் வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


 



கமலுக்கான கதையில் ரஜினி:


ரோபோவாகவும் விஞ்ஞானியாகவும் இரட்டை கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்து பட்டையை கிளப்பிய இப்படம் வசூலில் சாதனை படைத்தது. கமல்ஹாசனுக்காக 'ரோபோ' என்ற பெயரில் உருவாக்கிய கதையை சில காரணங்களால் இயக்க முடியாமல் போனதால் புதுமுகங்களை வைத்து 'பாய்ஸ்' திரைப்படத்தையும், ரஜினியுடன் 'சிவாஜி' படத்தையும் இயக்கிய பிறகு மீண்டும் 'ரோபோ' கதை சற்று சூப்பர்ஸ்டாருக்கு ஏற்றபடி மாற்றியமைத்து மிகவும் பிரமாண்டமாக ஷங்கர் உருவாக்கியது தான் 'எந்திரன்' திரைப்படம். கமலுக்காக உருவான 'ரோபோ' ரஜினிக்காக 'எந்திரன்' ஆனது. 


வேற மாதிரி ரஜினி :


மாஸான என்ட்ரி சாங், சந்தானம் கருணாஸ் காமெடி ட்ராக், ரொமான்ஸ், பன்ச் டயலாக், த்ரில்லிங் ஆக்ஷன் காட்சிகள் என மிகவும் வித்தியாசமான ஒரு ரஜினியை ரசிகர்கள் மிகவும் ரசித்தனர். அதே போல பத்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுத்த ஐஸ்வர்யா ராய் தமிழ் ரசிகர்களின் இதயங்களை அள்ளிவிடுத்தார். 


 



தரமான தொழிநுட்பம் :


ஸ்ரீநிவாஸ் மோகன் தலைமையில் அசாத்தியமான விஷுவல் எஃபெக்ட்ஸ், சாபு சிரிலின் கலை இயக்கம், ரத்னவேலுவின் ஒளிப்பதிவு, ஆண்டனியின் படத்தொகுப்பு  என அனைவரின் ஒட்டுமொத்த உழைப்பிலும் ஒருங்கிணைந்து தரமான தொழில்நுட்பத்தில் படத்தை பிரமிக்க வைத்தது. கற்பனையின் உச்சத்தை இதுவரையில் தமிழ் சினிமா கண்டதில்லை எனும் அளவுக்கு தொழில்நுட்பத்தில் அசத்தியது 'எந்திரன்'.  



எந்திரன் திரைப்படத்தை பிரம்மாண்டத்தின் உச்சகட்டத்துக்கு எடுத்து சென்றதில் முக்கிய பங்கு வகிப்பது கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம். மிகுந்த பொருட்செல்வத்தில் உருவான இப்படம் அதை விட பன்மடங்கு அதிகமாக வசூலை ஈட்டி சாதனை படைத்தது. ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் அனைத்து பாடல்களும், பின்னணி இசையும் விருந்தாகவே அமைந்தது.  


 



மெனெக்கெட்ட சூப்பர் ஸ்டார் :


பொதுவாக கமல்ஹாசன் தான் நடிக்கும் படங்களில் வித்தியாசமான மேக்-அப், தோற்றம் உள்ளிட்டவைக்கு அதிகமாக மெனெக்கெடுவார். முதல் முறையாக ரஜினி எந்திரன் திரைப்படத்திற்காக பல மணி நேரம் செலவு செய்து மெனக்கெட்டது இப்படத்திற்காக தான். இதுவரையில் தமிழ் சினிமாவில் குறுந்தாடி, படிந்து வாரிய ஹேர்ஸ்டைல் என புதுமையான தோற்றம் ஒரு பக்கமும் சிட்டி தி ரோபோ கதாபாத்திரத்துக்காக மிகவும் வித்தியாசமான ஒரு தோற்றத்திலும் கலக்கியிருந்தார். 


ரோபோக்களின் சாகசம் :


எந்திரன் படத்தில் ரஜினியின் சாகச காட்சிகளில் அவரின் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். முதல் பாதியில் நல்ல ரோபோவாகவும் பிற்பகுதியில் கேட்ட ரோபோவாக மாறிய பிறகு செய்யும் அராஜகமான செயலிலும் தூள் கிளப்பி இருந்தார். ரோபோக்களின் சாம்ராஜ்யத்தை உருவாக்கி அவர் செய்த சாகசங்கள், அடித்த லூட்டிகள் என நடித்த ஒவ்வொரு காட்சிகளும் ஹைலைட். 


விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் மட்டுமின்றி விருதுகளையும் குவித்து சாகச திரைப்படங்கள் பிற்காலத்தில் உருவாவதற்கு முன்னோடியாக அமைந்த படம் எந்திரன்.