நடிகர் கமல்ஹாசனுடனான தனது ஆதர்ச உறவு குறித்து பல பேட்டிகளில் பகிர்ந்துகொண்டுள்ளார் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன். கமல்ஹாசனும் பல மேடைகளில் சிவாஜி கணேசனுடனான தனது நட்பு பற்றிப் பகிர்ந்துகொண்டுள்ளார். 1987ல் இயக்குநர் சந்தான பாரதி இயக்கத்தில் சத்யராஜ் ஜீவிதா நடித்த படம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு. இதனை நடிகர் கமல்ஹாசன் தயாரித்தார். படத்தின் வெற்றிவிழாவில் பேசிய நடிகர் சிவாஜி கணேசன் கமல் உடனான தனது உறவு குறித்துப் பகிர்ந்துகொண்டார்.
“கமல்ஹாசனின் அப்பாவை எனக்கு தனிப்பட்ட அளவில் நன்கு தெரியும். அவர் என் வீட்டுக்கு அடிக்கடி வருவார்.நானும் அவர் வீட்டுக்குச் செல்வேன்.அவர் அப்பா என் வீட்டுக்கு வரும்போது கமல்ஹாசனை அழைத்துவருவார். அப்போது அந்த பிள்ளைக்கு 3 அல்லது 4 வயது இருக்கும். அப்போதே அந்தப் பிள்ளையை மடியில் அமர வைத்து உச்சி முகர்ந்திருக்கிறேன்.அதே பிள்ளைதான் இன்று வளர்ந்து பல உயரங்களைத் தொட்டு வருகிறார்.அதை நான் பார்க்கிறேன். அவர் பல்லாண்டு வாழ வேண்டும் என்பதைத் தவிர நான் என்ன வேண்டிவிடப் போகிறேன்” என்றார்.
மேலும் படத்தில் நடித்த சத்யராஜ் குறித்து பகிர்ந்த சிவாஜி கணேசன் ‘சத்யராஜின் வளர்ச்சியைக் கண்டு மிகவும் பெருமிதப்பட்டவர்களில் நானும் ஒருவன். நடிகனாவதற்கு முன்பே சத்யராஜை எனக்குத் தெரியும். சொல்லப்போனால் அவரது குடும்பத்தினர் எல்லோருமே எனக்குப் பரிச்சயம். சத்யராஜ் பிறந்ததே என்னுடைய மைத்துனர் வீட்டில்தான்’ என்றார்.
நடிகர் கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயகக்த்தில் நடித்து வெளியான விக்ரம் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.