சிவாஜி காலமாகி இன்றோடு 22 ஆண்டுகள் ஆகின்றன. தினமும் ஒரு திரைப்படமாக அல்லது பாடல் காட்சிகள் மூலமாக என அவர் நம்மை ஆட்டிப் படைத்துக்கொண்டுதான் இருக்கிறார். அவரை நினைக்க நினைக்க எத்தனை எத்தனையோ விஷயங்கள் வந்து மோதுகின்றன. உண்மையிலேயே நடிகர் திலகம் நம்பமுடியாத ஒரு அதிசயம்.. தனது பிறந்த நாள் எப்போது என்று சிவாஜி தெரிந்துகொண்டதுகூட வித்தியாசமான வரலாறுதான். சிவாஜியின் தந்தையான விழுப்புரம் சின்னய்யா மன்றாடியார், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக சிறைபிடிக்கப்பட்டார். அன்றைய தினம்தான் ராஜாமணிக்கு சிவாஜி பிறந்தார். பின்னாளில் இந்த சிறைபிடிப்பு தினத்தை கண்டுபிடித்த பிறகே அக்டோபர் ஒன்றாம் தேதி சிவாஜியின் பிறந்ததினம் என தீர்மானிக்கப்பட்டது.
இப்படிபட்ட அதிசயம் நடித்து வெளியான முதல் படமே 48 வாரங்கள் ஓடுகின்றன. ஆனாலும் இனிமேல் இன்னன்ன ரோல்களில்தான் நடிப்பேன் அவர் திமிர் பிடித்து அலையவில்லை. பராசக்தி (1952) படத்திற்கு பிறகு அந்த புதுமுக நடிகனின் திரைப்பயணத்தை அலசினால் இது நன்றாகவே தெரியும், நடிப்புக்கு அதிக ஸ்கோப் எந்த கேரக்டர்களுக்கு உள்ளதோ, அது வில்லன் பாத்திரங்களாக இருந்தாலும் அதையெல்லாம் சிவாஜி, மறுக்கவேயில்லை. கிடைத்த வாய்ப்பை பிடித்துக்கொண்டு திரையில் அடித்து நொறுக்கி 20+ வயதிலேயே இப்படியொரு அசாத்திய நடிகனா என்று பேசவைத்தவர்.
பெரும்பாலும் இமேஜ் பார்த்ததேயில்லை. 'திரும்பிப்பார்' படத்தில் செக்ஸ் ஒன்றே வாழ்க்கையின் பிரதானம் என நினைத்து, யாராக இருந்தாலும் பெண்டாள துடிக்கிற மோசமான பாத்திரம். வெறிபிடித்த தம்பியை திருத்த வேறுவழியின்றி, கடைசியில் உனக்கு ஒரு பெண்தானே வேண்டும் இதோ நான் இருக்கிறேன், என்னையே எடுத்துக்கொள் என்று சிவாஜியை பார்த்து அக்காவே பேசுவார். பராசக்தி குணசேகரனுக்கும் அடுத்த ஆண்டு வந்த திரும்பிப்பார் பரமானந்தத்திற்கும் இடையேதான் நடிப்பில் எவ்வளவு வேறுபாடு. அன்பு படத்தில் வயதான தந்தை இரண்டாம் தாரம் கட்டிக்கொண்டு இறந்துவிடுவார். அவருக்கு பிறக்கும் பிள்ளையை மகனுக்கு பிறந்ததாக கதைகட்டிவிடுவார்கள். காதலி உட்பட உலகமே சந்தேகப்பட்டு காரித்துப்பும் பாத்திரத்தில் சிவாஜி வெளுத்துக்கட்டுவார். அதிலும் சித்தி டிஆர் ராஜகுமாரியை காதலி பத்மினி சந்தேகப்பட்டு கக்கும் வார்த்தைகள் அனல் போல் இருக்கும், படுக்கத்தான் அஞ்சவில்லை. பழிக்குமா அஞ்சவில்லை, கற்புக்குத்தான் அஞ்சவில்லை, கடவுளுக்குமா அஞ்சவில்லை (விந்தன் வசனங்கள்). ஏமாற்றத்தை, அவமானங்களை சந்தித்து சிவாஜி கோபத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் பராசக்திக்கு பிறகு அன்பு படத்தை சொல்லலாம்.
பாடல்களே இல்லாத முதல் தமிழ்படமான அந்த நாள் (1954) படத்தில் அப்படியொரு கொடூரமான தேசத்துரோகி வேடம். ஜமாய்த்தார் சிவாஜி. முதல் பிரேமிலேயே கதாநாயகன் செத்துக்கிடக்கவேண்டும். எந்த கதாநாயகன் இப்படி நடிக்க ஒப்புக்கொள்வான்? சிவாஜி ஒப்பபுக்கொண்டு துவம்சம் செய்தார். முன்னணி ஹீரோவான எம்ஜிஆரின் கூண்டுக்கிளி படத்தில் நண்பனின் மனைவியையே சூறையாடத்துடிக்கும் காமவெறிபிடித்த மிருகம் வேடம். பசியால் வாடும் பெண்ணிடம் அரிசி வாங்கித்தருகிறேன், படுக்க வருகிறாயா என்று கேட்கும் அளவிற்கு வில்லத்தனமான ரோல் அது. படம் முழுக்க மிரட்டி எடுத்தார் சிவாஜி. அதனால்தான் நடிப்பில் அவரை மக்கள் மட்டுமேல்ல, நடிகர்களே கொண்டாடுகிறார்கள். யாராவது ஒருவர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசினாலோ, முகபாவத்தை மாற்றினாலோ, உடனே சகஜமாக வருகிற வார்த்தைகள். ’’ஆமா இவரு பெரிய, பாசமலர் சிவாஜி..’’தலைமுறைகளை தாண்டி கடந்து இன்றும் வீச்சு பெற்றிருக்கின்ற அளவுக்கு அந்த படத்தில் சிவாஜி அப்படி அசத்தினார்.
கே.பாலச்சந்தர் முதல் மணிரத்னம் வரையிலான ஜாம்பவான் டைரக்டர்களில் யாரைக்கேட்டாலும் அவர்களது டாப்டென் லிஸ்ட்டில் சிவாஜியின் பாசமலர் தவறாமல் இருக்கும். பிறவிக்கலைஞன் என்பார்களே, அது அரிதினும் அரிதாகவே அமையும்.. அமெரிக்காவில் நடிப்பாசையால் அலைமோதிய மார்லன் பிராண்டோவுக்கு 1947ல் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப்போட்டது எ ஸ்ட்ரீட்கார் நேம்டு டிஸையர் என்ற நாடகம். முன்னணி நடிகர்கள் இருவர் கடைசி நேரத்தில் நடிக்க மறுத்ததால், 24 வயது பிராண்டோவுக்கு வாய்ப்பு கிடைத்து பெரிதும் பேசப்பட்டு பின்னாளில் திரையுலக பயணத்திற்கு அது வெற்றிப்பாதையையும் அமைத்தது. நடிகர் திலகத்தின் கதையும் இதே ரகம்தான். உலக சினிமா வட்டாரத்தில் நடிப்புமேதை என போற்றப்பட்ட மார்லன் பிராண்டோவே, சிவாஜியை நேரில் சந்தித்து பேசிய பின்னர், சொன்ன வார்தைகள் இவை.‘’சிவாஜியால் என் அளவுக்கு சர்வசாதாரணமாக நடித்துவிடமுடியும்.. ஆனால் அவர் அளவுக்கு என்னால் நடிக்கவேமுடியாது’’
- பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்