சூப்பர் சிங்கர் பங்கேற்பாளராக இருந்து தற்போது சினிமாவில் பின்னனி பாடியாக மாறியுள்ள சிவாங்கி எம் ஓ பி வைஷ்னவ் கல்லூரியில் தனது பி. காம் பட்டத்தை பெற்றுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஷேர் செய்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி:
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமான முகம் சிவாங்கி. கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர், மலையாளம் கலந்த தமிழில் பாடியும், பேசியும் பலரது மனங்களில் இடம் பிடித்து விட்டார்.
கலகலவென இவர் செய்யும் சில செயல்கள் குழந்தைத் தனமாக இருந்ததால், க்ரிஞ்ச் வாங்கி எனவும் உயிர்வாங்கி எனவும் கேலி ஆரம்பத்தில் கேலி செய்தனர். பின்னர், மெல்ல மெல்ல இவரது சுபாவமே இப்படித்தான் என புரிந்து கொண்டு தங்கள் வீட்டு பிள்ளையாகவே சிவாங்கியை நினைக்க ஆரம்பித்தனர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மட்டுமே வந்து கொண்டிருந்த இவர், அதன் பிறகு குக் வித் கோமாளி முதல் சீசனில் கோமாளியாக களமிறங்கினார். சக கோமாளிகளுடன் சேர்ந்து இவர் செய்த சேட்டைகளும், குறும்புகளும் ரசிக்கும்படியிருந்ததால் ஷோ ஹிட்டாவதற்கு ஷிவாங்கியும் ஒரு காரணமாக அமைந்தார்.
இயல்பான குணாதிசியத்தால் பலரை மகிழ்விப்பது மட்டுமன்றி, நன்றாக பாடும் திறமையும் ஷிவாங்கிக்கு உண்டு. பேசும் போது ஒருவகையாக இருக்கும் இவரது குரல், பாடும் போது அப்படியே மாறி மிகவும் இனிமையான குரலில் பாடுவார். இதனால், பல ஆல்பம் சாங்குகள் பாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. சமீபத்தில் கூட, அருண்விஜய் நடிப்பில் வெளிவந்த சினம் படத்தில் ஷபீரின் இசையில் நெஞ்செல்லாம் என்ற பாடலை ஜிவி பிரகாஷ் குமாருடன் இணைந்து பாடியுள்ளார். பாடல் மட்டுமன்றி தன்னால் நடிக்கவும் முடியும் என்பதை, டான் படத்தில் லில்லி என்ற கதாப்பாத்திரத்தில் வந்து நிரூபித்தார் சிவாங்கி.
பி. காம் பட்டதாரியான சிவாங்கி:
தொலைக்காட்சியில் தோன்றி, பலருக்கும் பழகிய முகமாக மாறிய சிவாங்கிக்கு 22 வயதுதான் ஆகிறது. அவர், விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம் ஓ பி வைஷ்னவ் கல்லூரியில் இளங்களை வணிகவியல் பயின்ற அவர், தற்போது அப்படிப்பை முடித்து பட்டதாரியாகியுள்ளார்.
டி வி நிகழ்ச்சிகளில் பிசியாக இருந்த சிவாங்கி சரியாக கல்லூரிக்கு சென்றதே இல்லை என்றும், இதனால் தனக்கு பல அரியர்கள் உள்ளதாகவும் ஒரு சில நேர்காணல்களில் தெரிவித்து வந்தார். கடைசியில், அனைத்து பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா வந்து கை கொடுத்தது போல, இவருக்கு அந்த லாக்-டவுன் உதவியுள்ளது. இதனால், அனைத்து அரியர்ஸையும் காலி செய்து கடைசியாக பி.காம் பட்டதாரியாக மாறியுள்ளார். இவர், தன்னுடைய க்ராஜூவேஷன் டே ரீல்ஸையும் அவர் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள், சிவாங்கிக்கு லைக்ஸ் மழையை பொழிந்து வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.