தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர். ஜில், ஜங் ஜக், கீ, ஜாக்பாட், ஓமனப்பெண்ணே ஆகிய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அண்மையில் வெளியான சிதா ராமம் படத்தில் இவர் இசையமைத்த அனைத்துப் பாடல்களும் அனைவரிடமும் ரீச் ஆனது.  அதே சீதா ராமம் படத்தில்,  ஹே சீதா பாடலில் பாடிய பாடகர் சிந்துரியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  


அண்மையில்  பேட்டி ஒன்றில் தனது மனைவி சிந்துரியுடன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் தங்களது காதல் அனுபவங்களைப் பற்றி பல்வேறு தகவல்களை இந்த தம்பதியினர் பகிர்ந்துகொண்டனர்.


பார்த்த அடுத்த நாளே காதல்


விஷால் மற்றும் சிந்துரி இருவரும் முதல்முறையாக பார்த்துக்கொண்ட தருணம், காதல் நேர்ந்த தருணம் பற்றி ஆச்சரியப்படும் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்கள். கெளதம் வாசுதேவ் இயக்கிய கிட்டார் கம்பி மேலே நின்று படத்தில் வரும் காதல் கதைக்கு நிகராக இருக்கிறது இவர்களின் கதை. ஒரு விளம்பரப் பாடலுக்காக பாடகரைத் தேடிக்கொண்டிருந்தார் விஷால். பாடுவதில் ஆர்வம் கொண்ட சிந்துரி தனது கல்லூரி சீனியர் மூலம்  இந்தத் தகவலைத் தெரிந்துகொண்டு விஷாலில் ஸ்டூடியோவிற்கு சென்றிருக்கிறார்.


இவர்களின் முதல் சந்திப்பின்போது மின்சாரம் தடைபட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் இருவரும் தயக்கத்துடன் இருந்த நேரத்தில் விஷால் கிட்டாரை எடுத்து சிந்துரியைப் பாட சொல்லியிருக்கிறார். சுமார் ஒரு இரண்டு மணி நேரம் இருவரும் பாடிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். வீட்டிற்கு சென்று இருவரும் கிட்டதட்ட 9 மணிநேரம் யாஹூ மெசெஞரில் அரட்டையடித்திருக்கிறார்கள். அடுத்த நாள் இருவரும் சந்தித்துக் கொண்டபோது சிந்தூரியைக் காதலிப்பதாக சொல்லியிருக்கிறார் விஷால்.


சில காலம் அவகாசம் கேட்ட சிந்துரி பின் விஷாலின் காதலுக்கு யெஸ் சொல்லியிருக்கிறார்.


132 பேர் சேர்ந்து படம் பார்த்தோம்..


 தமிழ் , தெலுங்கு , மலையாளம் என அனைத்து மொழிகளிலும் சீதா ராமம் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகின. இது குறித்த தங்களது மனதிற்கு நெருக்கமான நினைவு ஒன்றைப் பகிர்ந்துகொண்டார்கள்.  “ சீதா ராமம் படத்தின் பாடல்கள் இவ்வளவு பெரிய வெற்றியடையும் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் படத்திற்காக எங்களது முழு உழைப்பையும் கொடுத்தோம். படத்தின் இயக்குநர் பொதுவாகவே பெரிதாக உணர்வுகளை வெளிக்காட்டாதவர். அவருக்கு ஒரு பாடல் பிடித்திருந்தால் விஷால் நல்லா இருக்கு என்று மட்டுமே சொல்வார். அனால் படம் வெளியானபோது காலை இயக்குநர் என்னை அழைத்து மிக உற்சாகமாக பேசினார். நானும் எனது மனைவி இருவர் மட்டுமே படத்தை சென்று பார்க்கலாம் என்று திட்டமிட்டிருந்தோம் . படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பது தெரிந்து இந்த படத்திற்காக  வேலை செய்த மொத்தம் 132  கலைஞர்களையும் அழைத்துச் சென்று நாங்கள் படத்தை பார்த்தோம்” என்று விஷால் சந்திரசேகர் கூறினார்