'சீதாராமம்' படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் ஹனு ராகவ்புடி இயக்கத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் , ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சீதாராமம். தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
காதல், பிரிவு, ஏக்கம், தேசப்பற்று, இழப்பு எனப் பல உணர்வுகளை வெளிப்படுத்தும் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியில் காதல் காவியமாக கொண்டாடப்பட்டது. இப்படிப்பட்ட மாபெரும் வெற்றியை கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் படத்தின் நடிகர் துல்கர் மற்றும் நடிகை மிருனாள் தாக்கூர் ஆகியோர் தனது சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டனர். அதே போல துல்கர் சல்மானின் நடிப்பும் மிகப்பெரிய அளவில் பாராட்டை பெற்றது.
தொடர்ந்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வரும், சீதா ராமம் திரைப்படம் வெளியாகி இன்றோடு 50 நாள் ஆகியுள்ள நிலையில், அதனைக்கொண்டாடும் விதமாக படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது.
அந்தக்காட்சியில் துல்கர் சல்மானும் அவருடன் சிறைப்பட்டு இருக்கும் உயர் அதிகாரி கால் பந்து விளையாடும் காட்சிகளும், சண்டைப்போட்டு கொள்ளும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. சீதாராமம் திரைப்படம் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
படம் 50 ஆவது நாளை தொட்டு இருப்பதையடுத்து நடிகர் துல்கர் சல்மான் இன்று பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்தப்பதிவில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, “ சீதாராமம் திரைப்படம் வெளியாகி 50 நாட்கள் ஆகிய நிலையில் திரையரங்குகளில் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைவிட பெரிதாக என்ன நான் கேட்கப் போகிறேன்! ஒரு கனவு நனவான தருணம் போல் இருக்கிறது. எனது படமான சுப் திரைப்படம் வெளியாகும் நாளான இன்று, சீதாராமம் திரைப்படம் 50வது நாள் கொண்டாட்டத்தை எட்டியிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இரண்டு திரைப்படங்களும் ஒரே நேரத்தில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அனைவருக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் துல்கர் சல்மான், சன்னி டியோல், ஸ்ரேயா தன்வந்திரி, பூஜா பட் ஆகியோர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ஹிந்தி திரைப்படம் 'ச்சுப் ரிவஞ்ச் ஆஃப் தி ஆர்டிஸ்ட்'. இது ஒரு சைக்காலஜிக்கல் மிஸ்டரி திரில்லர் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.