சீர்காழி கோவிந்தராஜன் என்ற கம்பீர குரோலோனின் வாரிசு சீர்காழி சிவசிதம்பரத்தின் 64வது பிறந்தநாள் இன்று. சற்று தொலைவில் இருந்து பார்த்தால் அப்படியே அவரின் தந்தையை ஒரு நிமிடம் கண்முன்னே நிறுத்தியது போன்ற தோற்றம். 


பெற்ற பட்டங்கள் :


கர்நாடக இசை பாடகர் மட்டுமின்றி ஒரு மருத்துவரும் ஆவார். செல்லமாக இவரை பாட்டு வைத்தியர் என்றும் அழைப்பதும் உண்டு. மீன் குட்டிக்கு நீந்த சொல்லித் தர வேண்டுமா என்ன? அந்த வகையில் மிகப்பெரிய இசை ஜாம்பவானின் வாரிசு சீர்காழி சிவ சிதம்பரத்திற்கும் அவரின் இசை திறமையை பாராட்டி கலைமாமணி விருது, பத்மஸ்ரீ விருது, தமிழிசை வேந்தர் பட்டம், இசைப் பேரறிஞர் விருது என பல உயரிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். 


 



தந்தையின் விருப்பம் :


சிவசிதம்பரம் இசை கலைஞராக வேண்டும் என்பதுதான் அவரின் தாயின் ஆசையாக இருந்தது என்றாலும் அவரின் தந்தை சீர்காழி கோவிந்தராஜனுக்கு மகனை ஒரு மருத்துவராக பார்க்க வேண்டும் என்றே விரும்பியுள்ளார். அதற்கு காரணம் இசை துறையிலும், சினிமாவிலும் ஏராளமான ஏமாற்றமும், சிக்கல்களும் இருப்பதால் அதற்கு மிக பெரிய மனோபலம் தேவைப்படும் என்பதால் இசை உலகம் மகனுக்கு தேவையில்லை என கருதினார். 


மருத்துவர் - பாடகர் :


தந்தையின் விருப்பத்திற்காக பொது மருத்துவ துறையில் பட்டம் பெற்றவர், தாயின் விருப்பப்படி சங்கீத வித்வான் கிருஷ்ணமூர்த்தி அய்யாவை குருவாக ஏற்றுக்கொண்டு சங்கீத ஞானத்தையும் மெருகேற்றி கொண்டார். தந்தை தாய் இருவரின் ஆசையையும் நிறைவேற்றிய பாக்கியவான் சிவசிதம்பரம் மருத்துவத்துடன் சேர்த்து மக்களை மகிழ்விக்கும் பாடகராகவும் அவதாரம் எடுத்தார். 


 



சினிமா வாய்ப்பு கொடுத்த மெல்லிசை மன்னர் :


தந்தையின் எதிர்பாராத இறப்புக்கு முன்னர் அவர் கமிட் செய்து வைத்திருந்த 41 கச்சேரிகளையும் சிவசிதம்பரம் பாடி கொடுத்து தந்தையின் ஆத்மாவை சாந்திபடுத்தினார். காலையில் மருத்துவர்  மாலையில் பாடகர் என மிகவும் பிஸியான ஷெட்யூல் போட்டு பக்தி ஆல்பம், கச்சேரிகளில் பாடி வந்தவருக்கு சினிமாவில் பாட வாய்ப்பு கொடுத்தது மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன். 'அபிநய சுந்தரி ஆடுகிறாள்' என மிருதங்க சக்கரவர்த்தி படத்தில் இடம்பெற்ற பாடல் தான் அவரின் அறிமுக பாடல். அதனை தொடர்ந்து ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். 


நடிகராகவும் மேடை ஏறியவர் :


அன்று எம்.எஸ்.வி இசையில் திரை பயணத்தை தொடங்கிய சிவசிதம்பரம் ஏ.ஆர். ரஹ்மான், இமான், ஜி. வி. பிரகாஷ் குமார் இசையில் கூட பாடியுள்ளார். பாட்டுடன் சேர்ந்து நடிக்கவும் செய்துள்ளார். மேடை நாடகங்களில் நடித்தவர் பின்னர் சில சீரியல்களிலும், தொடர்களிலும் நடித்துள்ளார். 


மருத்துவத்தில் இருந்து ஓய்வு பெற்றாலும் பாடுவதில் இருந்து ஓய்வு பெறாமல் ரசிகர்களை தனது கம்பீர குரலால் மருத்துவம் பார்த்து வருகிறார். மேலும் அவர் இசை மருத்துவ பணியை தொடர வாழ்த்துக்கள்!