Uma Ramanan Songs: மறைந்த பாடகி உமா ரமணன், இளையராஜா இசையில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.


பாடகி உமா ரமணன் காலமானார்:


தமிழ்த் திரை உலகில் குறிப்பிடத்தக்க பின்னணிப் பாடகிகளில் ஒருவரான,  உமா ரமணன் தனது 69-வது வயதில் சென்னையில் நேற்று காலமானார். உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  அடையாறு, காந்தி நகரில் உள்ள அவரது இல்லத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. நிழல்கள் திரைப்படத்தில் ‘பூங்கதவே தாழ்திறவாய்’ என்ற பாடல் மூலம் திரையுலகில் பிரபலமான உமா ரமணன், விஜய் போன்ற இளம் நடிகர்கள் படங்களிலும் பல பாடல்களை பாடியுள்ளர். எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, வித்யாசாகர் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்கள் உடன் சேர்ந்து பணியாற்றியுள்ளர். இளையராஜா இசையில் மட்டும் உமா ரமணம் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.


அந்த வகையில் அவரது குரலில் வெளியான சில முக்கிய பாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


உமா ரமணின் சூப்பர்ஹிட்பாடல்கள்: 


1980ல் வெளியான நிழல்கள் படத்தில் இடம்பெற்று இருந்த ”பூங்கதவே தாழ் திறவாய்” என்ற சூப்பர் ஹிட் மூலம் உமா ரமணன் தனக்கான இசைப் பயணதின் கதவை திறந்தார். அச்சம், வெட்கம் மற்றும் காதல் கலந்த அந்த மெல்லிய குரல், தனது முதல் பாடலிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த ஆச்சரியம் குறையும் முன்பே, தமிழ் சினிமாவில் 25 வருடங்கள் பயணித்து பல வெற்றி பாடல்களை பாடியுள்ளார். 



  • பன்னீர் புஷ்பங்கள் படத்தில் இடம்பெற்ற ”ஆனந்த ராகம்” பாடல் இளைஞர்களின் காதல் கீதமாக மாறியது. அந்த பாடல் இன்றளவும் தவிர்க்க முடியாத சூப்பர் ஹிட் பாடலாக உள்ளது. 

  • கோயில் புறா படத்தில் இடம்பெற்ற ”அமுதே தமிழே அழகிய மொழியே” பாடல் அவரது மொழித் திறனை வெளிப்படுத்தியது

  • தூரல் நின்னு போச்சு படத்தில் யேசுதாஸ் உடன் இணைந்து, பூபாளம் இசைக்கும் பாடலில் வர்ணஜாலம் நிகழ்த்தி இருந்தார்.

  • பகவதிபுரம் ரயில்வே கேட் படத்தில் “செவ்வரளி தோட்டத்திலே” பாடலில், ஒரு கிராமத்து பெண்ணின் காதல் ஏக்கத்தை அழகாய் வெளிப்படுத்தி இருப்பார்

  • புதுமைப் பெண் படத்தில் கஸ்தூரி மானே, வைதேகி காத்திருந்தாள் படத்தில் மேகம் கருக்கையிலே, ஒரு கைதியின் டைரி படத்தில் பொன் மானே, கேளடி கண்மணி படத்தில் நீ பாதி நான் பாதி போன்ற பாடல்கள் உமா ரமணனுக்கு கமர்ஷியல் ஹிட் அடித்துக் கொடுத்தன

  • அரங்கேற்ற வேளை படத்தில் வந்த ”ஆகாய வெண்ணிலாவே” பாடல், யேசுதாஸ் உடன் இணைந்து உமா ரமணம் மீண்டும் மனங்களை கொள்ளையடித்த ஒரு நிகழ்வாகும். 

  • மகாநதி பாடலில் ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாடல் இன்றளவும் ஒரு ஆகச்சிறந்த பக்தி பாடலாக மாறியுள்ளது

  • நந்தவன தேரு படத்தில் வந்த வெள்ளி நிலவே, கும்பக்கரை தங்கையா படத்தில் வந்த பூத்து பூத்து குலுங்குதடி, தம்பி பொண்டாட்டி படத்தில் கண்ணன் வந்தாலே, வால்டர் வெற்றிவேல் படத்தில் பூங்காற்று இங்கே வந்து போன்ற பல வெற்றி பாடல்களை பாடினார்.

  • நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சிவகாசி படத்தில் இது என்ன இது என்ன என்ற பாடலையும், திருப்பாச்சி படத்தில் கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு பாடலையும் உமா ரமணன் பாடியுள்ளார்.