எஸ்.பி.பாலசுப்ரமணியம்
கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். கிட்டதட்ட 16 மொழிகளில் மொத்தம் 40,000 பாடல்களை பாடி ஆறு தேசிய விருதுகளை வென்று இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளை வென்றுள்ளார்.தனது குழந்தைமையான குணத்தாலும், நகைச்சுவை உணர்வாலும் அனைவரது மனதிலும் ஏதோ ஒரு நினைவாக நிலைத்து நிற்பவர் எஸ்.பி.பி. கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய சினிமாவிற்கு பெரும் இழப்பாக அவர் காலமானார். அவரது நினைவாக அவர் வாழ்ந்த காம்தார் நகரின் பெயரை எஸ்.பி.பி நகர் என மாற்றி கெளரவித்தது தமிழ்க அரசு.
எஸ்.பி.பி குரலை பயண்படுத்த எதிர்ப்பு
ஏ.ஐ தொழில்நுட்பபத்தில் வளர்ச்சிக்குப் பின் பல்வேறு மறைந்த பாடகர்களின் குரல்கள் ஏஐ.மூலம் உருவாக்கப்பட்டு பாடல்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த தொழில்நுட்பத்தை முதலில் ஏ.ஆர் ரஹ்மான் லால் சலாம் படத்தில் அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து விஜயின் தி கோட் படத்தில் பவதாரணியின் குரல் பயன்படுத்தப்பட்டது. சமீபத்தில் ரஜினியின் வேட்டையன் படத்தில் மனசிலாயோ பாடலில் மலேசியா வாசுதேவனின் குரல் பயன்படுத்தப்பட்டது. எஸ்.பி பாலசுப்ரமணியம் குரை ஏஐ மூலம் பயன்படுத்துவதற்கு பலர் முயற்சித்து வரும் நிலையில் இதற்கு அவரது மகன் எஸ்.பி.பி சரன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மனசிலாயோ பாடலை அப்பா பாடியிருக்கமாட்டார்
"ஏஐ மூலம் யார் வேணாலும் யாருடைய குரலை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று எஸ்.பி.பி இருந்திருந்தால் மனசிலாயோ பாட்டை கேட்டு இல்லை நான் இந்த பாட்டை பாட மாட்டேன் என்று சொல்லியிருக்கலாம். யாரையும் புன்படுத்த நான் இதை சொல்லவில்லை. அது ஒரு நல்ல பாட்டாக இருக்கலாம். ஆனால் ஒரு பாடகருக்கு தான் எந்த பாட்டை பாட வேண்டும் பாட வேண்டாம் என்கிற சுதந்திரன் இருக்கிறது. ஏ.ஐ மூலம் அந்த பாடகரின் சுதந்திரம் பறிபோகிறது. எல்லா பாட்டையும் எஸ்.பி.பி பாடலாம் எல்லா பாட்டையும் மலேசியா வாசுதேவன் பாடலான் என்றால் அது எப்படி . மலேசியா வாசுதேவன் சார் பாடிய பூங்காற்று திரும்புமா பாட்டு அல்லது அந்த படத்தில் இருந்து வந்த எல்லா பாட்டையும் நீங்கள் மறுபடி உருவாக்கிவிட முடியாது. உங்களால் அந்த குரலை பிரதி செய்ய முடியும் ஆனால் அந்த பாடலில் கலந்திருக்கும் அந்த பாடகர்களின் உணர்ச்சிகளை உங்களால் உருவாக்க முடியாது. நிறைய பேர் அப்பா வாய்ஸ் ஏ.ஐ பண்ணலாமா என்று கேட்கிறார்கள். அது ஒரு பொறுப்பான இசையமைப்பாளாக இருந்தாலும் நான் கடுமையாக நோ சொல்லிவிடுகிறேன். அவருடைய குரலை எந்த வகையில் அவருடைய குடும்பத்தினர் கேட்க விரும்பவில்லை. அவர் ஒரு இடத்தில் இருக்கிறார். அப்படியே இருக்கட்டும் ." என எஸ்.பி.பி சரன் தெரிவித்துள்ளார்