சின்மயியின் குழந்தைகளின் முகத்தை சமூக வலைதளத்தில் வெளியிடக் கேட்டுக்கொண்ட ரசிகருக்கு சின்மயி கொடுத்த பதில் என்னத் தெரியுமா?


நடிகர் ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்துகொண்ட சின்மயி கடந்த ஆண்டு இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். கருவுற்றிருந்த தகவலை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருப்பதில்  சின்மயி மிக கவனமாக இருந்தார். இதன் காரணத்தினால் வாடகைத் தாய் மூலமாக அவர் குழந்தை பெற்றுக்கொண்டதாக வதந்திகள் பரவின. இந்த வதந்திகளுக்கு  தன் தரப்பிலிருந்து மறுப்புத் தெரிவித்தார் சின்மயி.


அண்மையில் ரசிகர் ஒருவர் சின்மயியின் குழந்தைகளின் முகத்தை வெளியிடுமாறு அவரிடம் கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த சின்மயி “நான் ஏற்கனவே  பலரது வெற்றுப்பை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. இத்தகைய சூழலில் எனது குழந்தைகளின் மேல் அத்தகைய வெறுப்பு படர்வதை நான் அனுமதிக்க மாட்டேன்” என பதில் தெரிவித்துள்ளார் அவர்.


மேலும் “அதே நேரத்தில் எனக்கு குழந்தை பிறந்த செய்தி வெளியானதிலிருந்து வைரமுத்துவின் ஆதரவாளர்கள் வைரமும் முத்தும் பிறந்திருக்கிறார்கள் என்று வசைபாடி வருகிறார்கள். வைரமுத்து என்னை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கியிருப்பது உண்மை என்றால் ஏன் எனது குழந்தைகள் வைரமுத்துவைப்போல் இல்லை என்று அவர்கள் கேட்கிறார்கள். இந்த கலாச்சார காவலர்கள் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்” என்று கூறியுள்ளார் சின்மயி.


2018-ஆம் ஆண்டு வைரமுத்துவின் மீது பாலியல் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் பாடகர் சின்மயி. இதனைத் தொடர்ந்து வைரமுத்துவின் ஆதரவாளர்களால் சமுக வலைதளங்களில்  கடும் வசைபாடலுக்கு உள்ளானார் சின்மயி.  வைரமுத்து தொடர்பான விஷயங்களில் தொடர்ந்து தனது கருத்தை தைரியமாக பதிவு செய்து வருகிறார் சின்மயி..


டெல்லியில் நிகழ்ந்து வரும் மல்யுத்த வீரர்களில் போராட்டம் தொடர்பாக தனது கருத்தை பதிவு செய்த சின்மயி, இந்திய மல்யுத்த சம்மெளனத்தின் தலைவர் பிரஜ் பூஷன் மீதான பாலியல் புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி நடந்துவரும் மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் வீரர்களுக்கு தனது  ஆதரவைத் தெரிவிக்கும்  தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின்  வைரமுத்து மீதான குற்றச்சாட்டுகள் கூறித்து பேச்சு வரும்போது மட்டும் ஏன் மெளனம் சாதிக்கிறார் என கேள்வி எழுப்பியுள்ளார்.


“வைரமுத்துவை பாதுகாக்கும் பலரது பெயர்களை நான் வெளியிடாமல் இருக்கிறேன். வைரமுத்து குற்றமற்றவர் என்று ஒருவரால் கூட சொல்லமுடியாது. கடந்த ஐந்து ஆண்டுகளாக வைரமுத்து மீது நான் தொடுத்த வழக்கு சிவில் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. ஆனால் இதுகுறித்து தமிழக முதல்வரிடம் நான் கேள்வி எழுப்பும்போதெல்லாம் அவர் மெளனமாகி விடுகிறார்’ எனக் கூறியுள்ளார் சின்மயி.