பிரபல நடன கலைஞர் ஜானி மாஸ்டர் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . பாலியல் வழக்கில் சிறை சென்று ஜாமினில் திரும்பிய ஜானி மாஸ்டர் அவர் மீதான பாலியல் வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள் அவருக்கு கொடுக்கும் ஆதரவு குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஜானி மாஸ்டர் குறித்து பின்னணி பாடகி சின்மயி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜானி மாஸ்டருடன் ஏ.ஆர் ரஹ்மான் புகைப்படம் சர்ச்சை
பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் கடந்த ஆண்டு பாலியல் வழக்கில் சிறை சென்றார். 16 வயது பெண் துணை நடன கலைஞரை ஜானி மாஸ்டர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் படப்பிடிப்பிற்கு சென்ற இடத்தில் தன்னை கட்டாயபடுத்தி பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்தியதாக அந்த பெண் புகாரளித்தார். இதனைத் தொடர்ந்து விசாரணைக்காக ஜானி மாஸ்டர் சிறை சென்று ஜாமினில் வெளிவந்தார். சிறைக்கு சென்றபின் ஜானி மாஸ்டர் பட வாய்ப்புகளை பெறுவதில் நிறைய சவால்களை எதிர்கொண்டார்.
கடந்த சில மாதங்களாக மீண்டும் படங்களில் பணியாற்ற தொடங்கியுள்ளார் ஜானி மாஸ்டர். தெலுங்கு , இந்தி , தமிழ் என அனைத்து மொழிகளிலும் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்து வருகிறார் ஜானி மாஸ்டர். இப்படியான நிலையில் தான் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுடன் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஜானி மாஸ்டர். ராம் சரண் நடித்துள்ள பெட்டி படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜானி மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். இப்பாடலை ஹைதராபாதில் படக்குழு பிரம்மாண்டமாக வெளியிட்டது. நிகழ்வில் ஏ ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் ஜானி மாஸ்டர் பதிவிட்டு 'உங்கள் ஆதரவான வார்த்தைகளுக்கு நன்றி' என பதிவிட்டுள்ளார் . இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலர் ரஹ்மான் மீது விமர்சனங்களை எழுப்பியுள்ளார்கள்.
ஜானி மாஸ்டர் பற்றி சின்மயி
தனது எக்ஸ் தள பதிவில் " ஜானி மாஸ்டர் ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தது மட்டுமில்லாமல் அந்த பெண்ணை பணியிடத்தில் மிரட்டவும் செய்திருக்கிறார். ஜானி மாஸ்டர் அதீத பண பலம் மற்றும் பெரிய தொடர்புகள் கொண்ட ஒரு நபர். அவரைச் சுற்றியுள்ளவர்களை பொறுத்தவரை அந்த பெண்ணின் சம்மதத்துடன் நடந்த ஒன்றாகவே கருதுகிறார்கள். இந்த வழக்கில் ஜானி மாஸ்டர் நிரபராதியாக நிரூபிக்கப்படுவார் என அவரது மனைவியும் அவரைச் சுற்றி உள்ள அனைவரும் நம்புகிறார்கள். இதற்கு மேல் அவருக்கு விருதுகள் மேல் விருதுகள் கொடுக்கப்படும். இந்த நிகழ்வை வைத்து இவரைப் போன்ற பல பாலியல் குற்றவாளிகள் உருவாவார்கள்" என சின்மயி கூறியுள்ளார்