கடந்த சில நாட்களாக சென்னையில் ஒரு பள்ளியில் எழுந்த பாலியல் புகார் தமிழ்நாட்டில் பெரியளவில் பேசு பொருளாக மாறியது. இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசும் தீவிர நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்திருந்தது. அதற்கேற்ப நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இந்தச் சூழலில் பாடகி சின்மயி தன்னுடை பாலியல் புகாரில் மட்டும் ஏன் இவ்வளவு நாள் விசாரணை நடைபெறவில்லை என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பி வந்தார். இதற்கு பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தனர். 


இந்த சமயத்தில் கவிஞர் வைரமுத்துவிற்கு ஒஎன்வி விருது அறிவிக்கப்பட்ட உடன் அவரை தமிழ்நாடு முதலமைச்சர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதுவும் பெரிய சர்ச்சை ஆக தொடங்கியது. அத்துடன் கேரளா நடிகைகள் சிலரும் வைரமுத்துவிற்கு விருது அறிவித்தது தொடர்பாக தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வந்தனர். இதனால் சம்மந்தப்பட்ட அமைப்பு, விருது தொடர்பாக மறுபரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்தது. 


 






இந்தச் சூழலில் ட்விட்டரில் சின்மயி தன்னுடைய திருமணத்திற்கு எதற்காக வைரமுத்துவை அழைத்தார் என்பது தொடர்பாக ஒரு பதிவை செய்திருந்தார். அதில், "என் திருமணத்திற்கு வைரமுத்துவை அழைக்க சொன்னதே அவருடைய மகன் மதன் கார்க்கி தான். நான் அவருடை தந்தை பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று கூறிய பிறகும் அவர் என்னை அழைக்க சொன்னார்" எனப் பதிவிட்டிருந்தார். 




இதற்கு மதன் கார்க்கி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில், "சின்மயி கூறுவது பொய். அவர் என்னுடைய தந்தை திருமணத்திற்கு அழைக்க விரும்பினார். ஆனால் என் தந்தையை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. அதனால் என்னிடம் கேட்டார். நான் சந்திக்க நேரம் வாங்கி கொடுத்தேன். அதன்பின்னர் சின்மயி தனியாக என் தந்தை இல்லத்திற்கு சென்று அவரிடம் காலில் விழுந்து ஆசி பெற்று திருமணத்திற்கு அழைத்தார்" எனப் பதிவிட்டுள்ளார். 


 






இதற்கு பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர், "நான் கூறுவதை மதன் கார்க்கி பொய் என்று சொன்னால் அதற்கு காலம் தான் பதில் சொல்லும். அவர் தன்னுடைய தந்தை எப்படி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று அவர் கூறியதை நான் நினைவுப்படுத்த வேண்டிய காலம் வந்துள்ளது. அன்று நான் கைப்பேசி அழைப்பை ஸ்பீக்கரில் வைத்து பேசினேன். இதனால் அவர் பேசியதற்கு சாட்சியம் உள்ளது. மேலும் மதன் கார்க்கியும் அவருடைய மனைவி நந்தினியும் எனக்கு துணை நிற்கிறேன் என்று கூறினார்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.