மீடூ (Me Too)


கடந்த 2006ஆம் ஆண்டு சமூக செயற்பாட்டாளரான தரானா புர்கே என்கிற கறுப்பினப் பெண்ணால் பயன்படுத்தப்பட்ட வார்த்தை ‘மீ டூ’. விளையாட்டு, சினிமா, தகவல் தொழில்நுட்பத் துறை என பல்வேறு சமூக வெளிகளில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்களை வெகு ஜனத்தில் அடையாளப்படுத்தும் முயற்சியாக இந்த இயக்கம் தொடங்கியது.


இந்தியாவில் இந்த இயக்கம் கடந்த 2018ஆம் ஆண்டு பரவலானது, பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவர் குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பாடகி சின்மயி வைரமுத்துவின் மேல் மீ டூ குற்றச்சாட்டை வைத்தார்.  பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்னைகளைப் பேச உருவான ஒரு இயக்கம் கிட்டதட்ட பெண்களுக்கே எதிரான ஒரு இயக்கமாகவும் சமூக வலைதளங்களில் மாற்றப்பட்டது. ’ ஏன் இத்தனை வருடம் இதைச் சொல்லவில்லை’ ‘இதெல்லாம் விளம்பரத்திற்காக செய்யும் ஸ்டண்ட்’  ‘சினிமாவுல இருந்திட்டு இந்த நியாயம் எல்லாம் பேசக்கூடாது’ என்று பல்வேறு கருத்துக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக வைக்கப்பட்டன.


இப்படியான நிலையில் மீ டூ குறித்து மூத்த நடிகை செளக்கார் ஜானகி பேசியுள்ள பழைய காணொளி ஒன்றைப் பகிர்ந்து பாடகி சின்மயி அவரை விமர்சித்துள்ளார்.


ஏன் இவ்வளவு கீழ்தரமாக நடந்துகொள்ள வேண்டும்..


 நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் உடனான நேர்க்காணல் ஒன்றில் பேசிய நடிகை செளக்கார் ஜானகி இப்படி கூறியுள்ளார். “சமீப காலங்களில் என்னை அதிகம் தொந்தரவு செய்யும் ஒரு விஷயம் மீ டூ. விளம்பரத்திற்காக இப்படியான ஒரு கீழ்த்தரமான விஷயத்தை ஏன் செய்ய வேண்டும். என்னைக்கோ நடந்தது, நடக்காதது, நடக்க வேண்டியது அன்றைக்கு நீ ஒத்துக்கிட்டு இன்னைக்கு நீ வேற மாதிரி போனது. அன்னைக்கு நீ ஓகே சொல்லி உனக்கு சூட் ஆச்சு  நீ வாய மூடிட்டு இருந்த. இன்னைக்கு எங்கயோ ஹாலிவுட்ல சொன்னாங்க பாலிவுட்ல சொன்னாங்கனு நீயும் வந்து சொன்னா அது கேவலம்.


நீ அப்படி சொல்வது உன்  குடும்பத்தை , உன் கணவனை , உன் குழந்தைகளை தான் புன்படுத்தும். இலை மறைவா காய் மறைவா இருந்தா தான் வாழ்க்கை. இந்த மீடூ பிஸ்னஸ் வந்ததுக்கு அப்புறம் நான் தொலைக்காட்சி பார்ப்பவதை நிறுத்திவிட்டேன். இப்படி சொல்வது மூலமா நீ எதை நிரூபிக்க நினைக்கிற? உன் பின்னாடி ஒருத்தன் வந்தான் கைய புடிச்சு இழுத்தான்னு சொன்னா நாளைக்கு உனக்கு என்ன மரியாதை இருக்கு . நான் பெண்களுக்காக போராடுகிறவள்.  ஆனால் இருபது வருஷத்துக்கு முன்னாடி நடந்தத இப்போ வந்து சொன்னா அதை எல்லாம் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.” என்று அவர் கூறியுள்ளார்.






 


இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பாடகி சின்மயி “பாதிக்கப் பட்டவர்களை குற்றவாளிகளாக்குவதை தான் இந்த வீடியோ செளகார் ஜானகி மற்றும் ஒய் ஜி மகேந்திரன் செய்கிறார்கள். பெண்ணைப் பற்றிய பாடமெடுக்க, அரைவேக்காடுகள் இந்த வீடியோவை தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.