'மதுரைக்கு போகாதடி' ,'பல்லே லக்கா' ,'ஓமணப் பெண்ணே' போன்ற பாடல்கள் வெளியாகி ஆண்டுகள் பல இருந்தாலும் இன்று வரை வைப்ரண்டாக மக்களிடயே இருந்து வருகிறது. இதற்கு காரணம் அந்த குரலுக்கு பின்னால் இருக்கும் எனர்ஜி தான்; அந்த குரலுக்கு சொந்தக்காரர்,பென்னி தயாள். இவர் கடைசியாக லெஜெண்ட் திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் 'வாடி வாசல் ' பாடலை பாடியிருந்தார். அவ்வபோது இசை நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார்.
இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்த பதிவில் அவர் ஏர்லைன்-களின் அஜாக்கிரதையினால் இசை கருவிகள் மற்றும் பொருட்கள் சேத மடைகிறது என கடுமையாக சாடியுள்ளார்.
அந்த பதிவில் அவர்,"இது இந்தியாவிலுள்ள அனைத்து ஏர்லைன்களுக்குமான செய்தி. இசைக்கலைஞர்கள் கடினமாக உழைத்து பணம் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் இசை நிகழ்ச்சிகளுக்காக செல்லும் போது அவர்களது இசைக்கருவிகளை ஏர்லைன்கள் சரியாக பார்த்துக் கொள்வதில்லை. இண்டிகோ,விஸ்தாரா, ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்கள் இது போன்று இசைக்கருவிகளை எடுத்துச் செல்லும் போது அக்கறையின்றி செயல்படுகிறது.
பலர் தங்களது பொருட்களை உடைந்த நிலையில் எடுத்துச் செல்வது போன்ற காணொளிகளை பார்த்து வருகிறேன்; அது உங்களது அஜாக்கிரதையினால் தான் நிகழ்கிறது. அதனை எப்போதும் ஒப்புக் கொள்ள முடியாது. தனிப்பட்ட முறையில் 'விஸ்தாரா' நிறுவனம் ஏழு நாட்கள் இடைவெளியில், எனது இரண்டு பேக்குகளை உடைத்துள்ளது.
அது எனக்கு திரும்ப வேண்டும். அதே நேரத்தில் 'இண்டிகோ' நிறுவனமும் இசை கலைஞர்களிடம் அக்கறையின்றி செயல்படுகிறது; ஏர்லைன்-களில் பொருட்களை பார்த்துக் கொள்ளும் குழுவை நல்ல முறையில் தேர்வு செய்ய வேண்டும்; இசை நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கு முன்பே இது போன்று உடைந்து விடுகிறது.
எங்களது இசைக்கருவிகளை அக்கறையோடு பார்த்துக் கொள்ளுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்; எங்களுக்கு இசைக்கருவிகள் மிகவும் முக்கியமானது; அது தான் எங்களுக்கு உணவளிக்கிறது. இண்டிகோ,விஸ்தாரா,ஏர் இந்தியா,ஸ்பேஸ் ஜெட் ஆகிய நிறுவனங்கள் இசைக் கருவிகளை பார்த்துக் கொள்வதில் மிக மோசமாக இருக்கிறது. தயவு செய்து பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.அது உடைந்தால் அந்த தவறுக்கு பொறுப்பு எடுத்துக் கொள்ளுங்கள்." என கடுமையாக சாடியுள்ளார்.