இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தன் தாயாருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காக நள்ளிரவில் டெல்லியில் இருந்து தானாக காரை ஓட்டி கொண்டு வந்துள்ளார். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் மங்களார் - நார்சன் பகுதிக்கு இடையே வந்துகொண்டிருந்த போது, அதிகாலையில் திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் சென்டர் மீடியனில் மோதியுள்ளது. அதிவேகத்தில் வந்த கார் திடீரென விபத்தில் சிக்கியதால், எதிர்முனைக்கு பறந்துள்ளது. இதனையடுத்து படுகாயத்துடன் கார் கண்ணாடியை உடைத்து வெளியே வந்துள்ளார் பண்ட். தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் இருந்த ரிஷப் பண்டை, பேருந்து நடத்துநர் ஒருவர் தூக்கி பாதுகாப்பான இடத்தில் படுக்க வைத்துள்ளார். அந்த நடத்துனர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்ததையடுத்து பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


இந்நிலையில், விபத்து நடந்த இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் சிறிது நேரத்தில் வந்துள்ளார். அதில் இருந்த  மருந்தாளர், விபத்து நடந்த இடத்தில் இருந்து பண்ட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளா. பஸ் டிரைவர் ஒருவர் விபத்தில் அடிப்பட்டு இருந்த 25 வயது இளைஞரை ஆம்புலன்ஸில் ஏற்றி விட்டதாக  பணியில் இருந்த மோனு குமார் தெரிவித்தார். 


வலியால் துடித்த ரிஷப் பண்ட்:


ஆம்புலன்சில் சென்ற கொண்டிருந்தபோது, விபத்தில் இருந்த நோயாளி சுயநினைவை இழக்காமல் இருக்க மருந்தாளர்கள் அவர்களிடம் பேச்சு கொடுப்பார்கள். அதன்படி, ரிஷப் பண்ட்டின் விவரங்களை மோனு குமார் கேட்டறிந்தார். உங்கள் பெயர் என்ன..? என்று மோனு குமார் கேட்க, என் பெயர் ரிஷப் பண்ட். இந்திய கிரிக்கெட் வீரர் என தெரிவித்துள்ளார். அப்போது ரிஷப் பண்ட்டின் கண்ணில் காயம், மூக்கில் இருந்து ரத்தம், முதுகு உரிக்கப்பட்டும், காலில் காயம் இருந்தது என குமார் தெரிவித்தார்.


அப்போது வலியால் துடித்து கொண்டிருந்த ரிஷப் பண்ட் மருந்தாளரிடம், “அண்ணா, எனக்கு ரொம்ப வலிக்குது, முதல்ல எனக்கு கொஞ்சம் பெயின் இன்ஜெக்ஷன் கொடுங்க” என்று கேட்டுள்ளார்.  இதையடுத்து, மோனு குமார் வலிக்கு ஊசி போட்டார். பின்னர், சக்ஷாம் மருத்துவமனைக்கு முதன்மை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.


வலி நிவாரண ஊசி போட்டதற்கு பிறகு, மீண்டும் சுயநினைவுக்கு வந்த ரிஷப் பண்ட், என்னை எந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறீர்கள் என்று மோனு குமாரிடம் கேட்டுள்ளார். 


அதற்கு பதிலளித்த மோனு, ”பக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்கிறோம்” என்று கூற, உடனே ரிஷப் பண்ட்,” அரசு மருத்துவமனை வேண்டாம் அண்ணா, ஏதாவது பெரிய தனியார் மருத்துவனைக்கு அழைத்து செல்லுங்கள்” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, மருந்தாளர் மோனு குமார் ஆம்புலன்ஸ் டிரைவரிடம் தகவல் தெரிவித்து 10 கிமீ தொலைவில் இருக்கும் சக்ஷாம் மருத்துவனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். 


ஆம்புலன்ஸில் போய் கொண்டிருந்தபோது மோனு குமார், ரிஷப் பண்ட்டிடம் பேச்சு கொடுத்துள்ளார். விபத்து எப்படி நடந்தது..? என்ன ஆனது என்று கேட்க, எனக்கு எதுவும் நினைவில் இல்லை. எல்லாம் ஏதோ கனவுபோல் உள்ளது. கல் மீது கார் மோதியது மட்டும் ஞாபகம் இருக்கிறது. கண்ணை திறந்து பார்த்தபோது என்னை சுற்றி தீ மட்டும் எரிந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு சிலர் என்னை வெளியே இழுத்து காப்பாற்றினார்கள் என்றார். தொடர்ந்து மோனு குமார், உங்கள் குடும்பத்தில் யாரின் செல்போன் நம்பராவது நினைவில் இருக்கா? என்றதற்கு, என் தாயாரின் எண் மட்டும் உள்ளது என்று கூறி கொடுத்துள்ளார். அந்த எண்ணிற்கு அழைத்தபோது செல்போன் எண் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் ரிஷப் பண்ட் அனுமதிக்கப்பட்ட பின்னரே, காவல்துறையினர் உதவியுடன் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.