வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடிக்க இருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இதில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்


நடிகர் விஜய்யின் 68வது படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குவதன் மூலம் இயக்குநர் வெங்கட் பிரபு முதல்முறையாக விஜய்யுடன் கூட்டணி அமைக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைக்க, இரட்டை வேடங்களில் விஜய் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.


அதில் ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோதிகாவும், மற்றொரு கதாபாத்திரத்துக்கு பிரியங்கா மோகனும் ஜோடியாக நடிக்கவுள்ளதாக முன்னதாக தகவல் வெளியானது. மேலும் இந்த படத்தில் ஜெய் முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும், அவருக்கு ஜோடியாகவும் அபர்ணா தாஸ் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.


ஜோதிகாவிற்கு பதில் இவர்...




இந்நிலையில் ஜோதிகா நடிக்க இருந்த கதாபாத்திரத்திற்கு பதிலாக நடிகை சிம்ரன் நடிப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையானால் விஜய் மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்கும் 7ஆவது படமாக இது இருக்கும். மற்றொரு கதாபாத்திரத்தில் நடிகை பிரியங்கா மோகன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


வயதைக் குறைக்கும் விஜய்


மேலும் இந்தப் படத்திற்காக அப்பா - மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் விஜய்  நடிக்க இருக்கிறார். இதற்காக டீ ஏஜிங் தொழில் நுட்பம் மூலம் விஜய்யின் வயதை குறைத்துக் காட்டும் முயற்சிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.


கலிபோர்னியாவில் உள்ள USC ICT எனும் ஒரு கல்லூரியில் தான் 3டி முறையில் டீ-ஏஜிங் எனப்படும், இந்த வயதை குறைக்கும் தொழில்நுட்ப பணிகள் தளபதி 68 பணிக்காக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவத்தின் நிதியுதவி பெற்று செயல்படும் இந்தக் கல்லூரி, அவதார் , ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் ஆகிய படங்களில் பணியாற்றி ஆஸ்கர் விருதுகள் வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிறுவனம் தளபதி 68 மூலம் முதன்முறையாக இந்திய சினிமாவிற்குள் நுழைகிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் இதே தொழில்நுட்பம் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.