நிலவை தொடர்ந்து சூரியனை ஆராய்வதற்காக ஆதித்யா எல்1 (Aditya L1) எனும் விண்கலம், நாளை (செப்டம்பர் 2ம் தேதி) காலை விண்ணில் செலுத்தப்பட உள்ளது.  127 நாட்கள் பயணிக்கும் ஆதித்யா எல்1,  பூமியிலிருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து லெக்ராஞ்சியன் 1 (L1) என்ற புள்ளியில் நிலைநிறுத்தப்பட உள்ளது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு சுமார் 1,500 லட்சம் கிலோ மீட்டர். அதாவது, பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவில் நூறில் ஒருபங்கு தொலைவில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்படும்.


இந்த நிலையில் ஆதித்யா எல்1 (Aditya L1) விண்கலம் குறித்தும் அதன் செயல்பாடுகள், ஆய்வு குறித்தும் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் ABP Nadu-க்கு சிறப்புப் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறி உள்ளதாவது:


சூரியனுக்கு அருகில் செல்லாமல், குறிப்பிட்ட தூரத்தில் இருந்து மேற்கொள்ளப்படும் ஆய்வு எந்த அளவுக்கு சரியாக இருக்கும்?


இதில் ஏராளமான நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. பொதுவாக பூமியில் இருந்து எப்போதுமே சூரியனைப் பார்த்துக்கொண்டே இருக்க முடியாது. சூரியனைச் சுற்றி வளிமண்டலம் இருப்பதால், அங்கிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள், எக்ஸ் கதிர்கள் ஆகியவற்றை புவியின் வளிமண்டலம் வடிகட்டி விடும். இதனால் ஆய்வில் துல்லியத் தன்மை இருக்காது. 


பூமியைச் சுற்றி வருவதுபோன்ற தொலைநோக்கியை வைத்தால், அது 90 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியைச் சுற்றி வரும். அதனால் சூரியனைப் பார்க்க, ஒவ்வொரு சுற்றிலும் ஒரு நிமிடம் மட்டுமே கிடைக்கும்.  


இதனால் இடையூறு இல்லாமல், தொடர்ந்து சூரியனைப் பார்த்துக்கொண்டே இருக்க ஓர் இடம் வேண்டும். சூரியனில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் விண்கலம் இருந்தால், சூரியனிலிருந்து வரும் காந்தப் புயலை உணர்ந்து, அந்த புயல் வருகிறது என்று விண்கலம் பூமிக்குத் தெரிவிக்கும். அப்படிப்பட்ட இடம்தான் எல்1 என்று அழைக்கப்படும் லெக்ராஞ்சியன் புள்ளி. அங்கு சூரியனின் ஈர்ப்பு விசையும் பூமியின் ஈர்ப்பு விசையும் ஒன்றாக இருக்கும். 




அப்போது பூமி, சூரியனை ஓராண்டில் சுற்றினால், விண்கலமும் ஓராண்டில் சுற்றி வரும். இதன் மூலம் அந்த விண்கலம் எப்போதும் சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் இருந்து கொண்டே இருக்கும். அதாவது பூமியின் தலைக்கு மேலே ஒரு புள்ளியில் பொருள் ஒன்று இருந்துகொண்டே இருப்பதைப் போல. இதன் மூலம் அந்த விண்கலத்தின் மூலம் மின்காந்தப் புயல், சூரியப் புயல் ஆகியவை வருகிறது என்று பூமிக்கு தகவல் தெரிவிக்கப்படும்.


ஆதித்யா எல்1 எவ்வளவு நாட்களுக்கு இயங்கும்? இயங்கிக்கொண்டே இருக்க எரிபொருள் தேவைப்படுமா?


ஒரு விண்கலம் இயங்குவதற்கு எரிபொருள் தேவைப்படாது. நியூட்டனின் முதல் விதிப்படி ஒரு பொருள் இயங்கினால், தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும். அதற்கு எதிராக ஒரு விசை செயல்பட்டால் மட்டுமே, அது நிற்கும். பூமியில் பொருட்கள் எல்லாமே நிற்பதற்குக் காரணம் உராய்வு விசை. ஆனால் விண்வெளியில் ராக்கெட் உள்ளிட்ட பொருட்கள் இயங்கிக் கொண்டே இருக்காது. அது செலுத்தப்பட்ட பாதையில் சுற்றிக் கொண்டே இருக்கும். 


பூமியின் மேற்பரப்பில் ஒரே மாதிரியான ஈர்ப்பு விசை இருப்பதில்லை. இதனால் பூமியைச் சுற்றி வரும் செயற்கைக்கோள்களுக்கு தடுமாற்றம் ஏற்படும். இதனால் அது சுற்றி வரும் பாதையில் சில மாற்றங்கள் ஏற்படும். அதை மீண்டும் பழைய பாதைக்கு கொண்டுவர சிறிய ராக்கெட்டுகள் செலுத்தப்படும். அதற்குதான் எரிபொருள் தேவை. விண்கலம் தொடர்ந்து செயல்படுவதற்கு எரிபொருள் தேவை இல்லை.


உதாரணத்துக்கு விண்வெளியில் ஒரு பந்தை எட்டி உதைத்தால், அது பிரபஞ்சத்தின் எல்லை வரை பயணித்துக் கொண்டே இருக்கும். அதன் மீது ஏதாவது மோதினால்தான் திசை திரும்பும். ஆனால் நிற்காது. அவ்வாறுதான் தொலைத்தொடர்பு செயற்கைக் கோள்கள் இயங்கி வருகின்றன. 


சூரியனை ஆய்வு செய்வதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளன?


சூரியனைப் பற்றி எப்போதுமே விலகாத மர்மம் ஒன்று உள்ளது. சூரியனுடைய மேற்பரப்பு (photosphere) 5,600 டிகிரி வெப்பநிலை கொண்டது. சூரியனைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தின் பெயர் கரோனா (Stellar corona).  கரோனாவின் வெப்பநிலை மில்லியன் டிகிரி. வெப்பப் பிழம்பாக தகிக்கும் சூரியன் சூடாக இருக்கும். வெளியே வரவர வெப்பம் குறையும். அதாவது சூரியனின் மேற்பரப்பு 5,600 டிகிரி வெப்பநிலை மட்டுமே இருக்கும் சூழலில், அதன் வளிமண்டலம் அதைவிடக் குறைவான வெப்பத்தைத்தானே கொண்டிருக்க வேண்டும். ஏன் 10 லட்சம் டிகிரி வெப்பத்தைக் கொண்டிருக்கிறது? இது அறிவியலாளர்கள் மத்தியில் புரியாத புதிராக இருக்கிறது. விலகாத மர்மமாக இருக்கிறது.


அதேபோல சூரியனிலிருந்து வரும் காந்தப் புயல் செயற்கைக்கோள்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க விண்வெளி வானிலையில் காந்தப் புயல் குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்பு தேவைப்படும். அதை ஆதித்யா எல்1 நமக்கு தரும். இவை தவிர்த்து சூரிய ஒளிப்புயல், சூரிய எரிமலை எப்படி, ஏன் ஏற்படுகின்றது? அதனால் பூமியின் காந்த புயல் மீது என்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது குறித்தும் ஆதித்யா எல்1 ஆராய உள்ளது.




ஆதித்யா எல்1 விண்கலத்தின் ஆயுள் காலம் எவ்வளவு?


ஒவ்வொரு விண்கலத்துக்கும் ஆயுட்காலம் வேறுபடும். இப்போது ஆதித்யாவை அனுப்பும்போது ஓராண்டு காலம் என்று அனுப்புகிறோம். அதற்கு பிறகு அவ்வப்போது விண்கலத்தை சரியான திசையில் நிலை நிறுத்துவோம். பிறகு மீதம் இருக்கும் எரிபொருளைப் பொறுத்து ஆயுட்காலம் மாறுபடும். எரிபொருள் தீர்ந்த பிறகு சூரியன் மீதே விண்கலம் விழுந்து விடும். அல்லது சூரியனிலிருந்து விலகி வெளியே சென்று விடும். ஆனால் விலகி வெளியே செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு. 


ஆதித்யா விண்கலம் ஐந்து ஆண்டுகள் வரை செயல்படலாம். நாம் விண்கலத்தை அனுப்பும் முறையில் இருந்து, நிலை நிறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆயுட்காலம் மாறுபடும். ஏனெனில் செவ்வாய் கிரகத்துக்கு நாம் அனுப்பிய விண்கலம் ஓராண்டுதான் செயல்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் பத்தாண்டுகள் கடந்து செயல்படுகிறது. ஏனெனில் நாம் வைத்த குறி சரியாக இருந்தது; எரிபொருள் அதிகம் செலவாகவில்லை.


அதேபோல சந்திராயன் 2 ஆர்பிட்டர் ஆறு மாதங்கள் மட்டுமே இயங்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் பத்து ஆண்டுகள் வரை செயல்பட வாய்ப்புண்டு. ஏனெனில் இன்னும் 150 கிலோ எரிபொருள் மீதம் உள்ளது.


ஆதித்யா எல்1 (Aditya L1) விண்கலத்தில் என்னென்ன கருவிகள் உள்ளன?


இதில்  இரண்டு விதமான கருவிகள்  உள்ளன. சூரியனில் நடக்கும் விஷயங்களை ஆராயும் கருவி .இன்னொன்று விண்கலம் இருக்கும் பகுதியில் உள்ள காந்தப் புலம், சூரியக் காற்றின் வேகம் ஆகியவற்றை அளக்கும் கருவி (Aditya Solar wind Particle Experiment), அதேபோல பிளாஸ்மா துகள் பகுப்பாய்வுக் கருவி (Plasma Analyser Package for Aditya), காந்தப்புல அளவை மானி (Magnetometer) உள்ளன.




அறிவியல் ஆராய்ச்சியில் அடுத்தடுத்த கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கும் சூழலில் சூரியனுக்கு வெகு அருகில் சென்று ஆய்வு மேற்கொள்வது எப்போது நிகழும்?


அது மிகவும் கடினம். நாசா, சூரியனுக்கு பார்க் ப்ரோ என்னும் விண்கலத்தை அனுப்பியது. இது கடந்த 10 ஆண்டுகளாக சூரியனை சுற்றி வருகிறது. இது ஒவ்வொரு முறை சுற்றும் போதும், சூரியனை நெருங்கிக் கொண்டே வருகிறது. பார்க் ப்ரோ விரைவில் சூரியனுக்கு அருகில் செல்லும்போது, சூரியன் மீதே விழுந்து விடும். விழுவதற்கு முன்பு சூரியனைப் பற்றிய தகவல்களை திரட்டி அனுப்பும். அதைக் கொண்டு முக்கிய விவரங்களை அறியலாம். சூரியன் எவ்வளவு பெரியது என்னும் தகவல்கள் வரலாம்.


சூரியன் எதிர்காலத்தில் அழிந்து விடும் என்று சொல்கிறார்களே உண்மையா?


உண்மைதான். ஆனால் அதற்கு 500 கோடி ஆண்டுகள் ஆகலாம். சூரியன் பிறந்து 500 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது நடுத்தர வயதில் உள்ள  விண்மீன்தான் சூரியன். இன்னும் 500 கோடி ஆண்டுகள் கழித்து அத்தகைய நிலை ஏற்படலாம். 


இவ்வாறு முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் தெரிவித்தார். 


எது எப்படியோ, சந்திரயான் நிலவில் வெற்றித் தடம் பதித்ததைப் போல, ஆதித்யா எல்1 விண்கலம் ஆதவனைச் சுற்றி நிலைநிற்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.