பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகி சிம்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


பத்து தல சிம்பு


கோலிவுட்டில் சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களைக் கவந்த இயக்குநர் கிருஷ்ணாவின் அடுத்த படம்  ‘பத்து தல’. கன்னட சினிமாவில் 2017ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த ’மஃப்டி’ படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தில் நடிகர் சிம்புவுடன் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன் உள்ளிட்ட நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். வரும் மார்ச் 30ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மீண்டும் இணையும் சிம்பு - ஏ.ஆர் ரஹ்மான்


நேற்று இப்படத்தின் நடிகர் சிம்பு, பிரியா, கௌதம் கார்த்திக் ஆகியோரின் கதாபாத்திரங்களின் லுக் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் ஹிட் அடித்தன. இது குறித்து “என்ன ரத்தங்களா ஹேப்பியா, நீங்க இல்லாம நான் இல்ல” எனப் பதிவிட்டு நேற்று ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். 


இந்நிலையில் இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் மார்ச் 18ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


முன்னதாக இந்தப் படத்தின் முதல் பாடலான நம்ம சத்தம் ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. சிம்புவின் பிறந்த நாளான சென்ற பிப்.03ஆம் தேதி இப்பாடல் வெளியான நிலையில் ரசிகர்கள்  இந்தப் பாடலை ட்ரெண்ட் செய்து மகிழ்ந்தனர்.


ஏஜிஆர் கதாபாத்திரம்


மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களுக்கு ரசிகர்கள் தந்த உற்சாக வரவேற்பை படுத்து ஏஜிஆர் எனும் கதாபாத்திரத்தில் பத்து தல படத்தில் சிம்பு நடிக்கிறார்.


மேலும் வெந்து தணிந்தது படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது மீண்டும் இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் - சிம்பு கூட்டணி இணைந்துள்ளனர்.


முன்னதாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினம், ஹைதராபாத், கர்நாடகாவின் சில பகுதிகள், காரைக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று நிறைவடைந்தது.