சிலம்பரசன்... சிம்பு... எஸ்டிஆர்... என எத்தனையோ பெயர்களை மாற்றினாலும்... மாறாதது... சிம்புவும் அவரது சர்ச்சையும் தான். குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவை கலக்கிய சிம்பு, அதன் பின் திரையுலகில் நாயகனாக அறிமுகம் ஆன பிறகு வேறு முகத்திற்கு மாறினார். துவக்கத்திலேயே லிட்டில் சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தோடு அறிமுகமான சிம்பு, வழக்கமான இளைஞர்கள் கையில் எடுக்கும் காதல் கதைகளை தான் அவரும் தொட்டார்.
ஆனால், அவருக்கான அடையாளமாக அவரது தந்தை டிஆர் எடுத்த திரைப்படங்கள் பெரிய அளவில் சொபிக்கவில்லை. பிற இயக்குனர்கள் படங்களில் சிம்பு வந்த பின், அவர் வேறு மாதிரி உருவம் பெற்றார். கதைக்குள் வந்தார். கதாநாயகனாக மாறினார். ஆனாலும் அடுத்த சூப்பர் ஸ்டார் என்கிற இலக்கு மட்டும் அவரிடத்தில் ஆழமாக இருந்தது.
அவரது படத்தேர்வும் அதை நோக்கியே அமைந்தது. 2002ல் காதல் அழிவதில்லை படத்தில் தோன்றிய சிம்பு, 2004ல் மன்மதனில் வேறு விதமாக தெரிந்தார். அதற்கு காரணம், அவரே திரைக்கதை எழுதி தனக்கான கதையை தேர்வு செய்யும் ஆற்றலையும் அறிவையும் பெற்றதே. 2005ல் தொட்டி ஜெயா படத்திற்குப்பின் உருவத்திலும், உள்ளத்திலும் ஆக்ஷன் ஹீரோவாக மாறினார் சிம்பு.
அதன் பின் சிம்பு பாதை வேறு விதமாக சென்றது. 2006ல் சரவணா, வல்லவன், 2008 ல் காளை, சிலம்பாட்டம் என அடுத்தடுத்து ஹிட் படங்கள். அப்போது சிம்பு, அடுத்த தலைமுறைக்கான நடிகர் போட்டிக்கு வந்து சேர்ந்தார். அதாவது... எம்.ஜி.ஆர்.,-சிவாஜி, ரஜினி-கமல், அஜித்-விஜய் என்கிற வரிசையில் சிம்பு-தனுஷ் என்கிற அந்த தலைமுறை இடத்திற்கான போட்டிக்கு வந்தடைந்தார் சிம்பு.
2010 ல் அவர் நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் தான் சிம்புவிற்கு வேறு லெவல் பெயரை கொடுத்தது. அதுவரை விரல் வித்தைகளை காட்டிக் கொண்டிருந்த சிம்பு... பக்கம் பக்கமாக பஞ்ச் டயலாக்குகளை பேசிக் கொண்டிருந்த சிம்பு... விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் அவை அனைத்தையும் மூட்டை கட்டி வைத்து விட்டு, கதை நாயகனாக நடித்தார். படமும் அனைத்து விதத்திலும் வெற்றி பெற்றது.
2010 க்கு பின் சிம்புவுக்கு என்ன ஆனது.... அது அவருக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை! அதன் பின் சிம்புவின் படங்கள் எடுபடாமல் போனது. ஒருவேளை அது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் எதிரொலியாக கூட இருக்கலாம். அதன் பின் அந்த சிம்புவை தான் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள் போலும். ஆனால் அவர் வேறு விதமாக வந்தார்.
2011 ல் வானம், ஒஸ்தி, 2012 ல் போடா போடி... அதன் பின் ஒரு பெரிய.... ‛கேப்’. 2015 ல் இது நம்ம ஆளு, அதே ஆண்டில் விண்ணைத் தாண்டி வருவாயா கூட்டணியின் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான அச்சம் என்பது மடமையடா என எல்லாமே சுமார் ரகம். படமும் எடுபடவில்லை... சிம்புவின் மார்க்கெட்டும் சரிந்தது. இதற்கிடையில் அவரது அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படம் தான், சிம்புவின் திரைப்பாதையை திருப்பிப் போட்டது. படத்தில் தயாரிப்பாளருக்கும் அவருக்குமான பிரச்சனை உலகறிந்தது. அதை மீண்டும் திரும்ப சொல்ல வேண்டியதில்லை.
அந்த விவகாரம், சிம்புவின் அடுத்தடுத்த படங்கள் வெளியாவதை தடுத்தது. ஏன்... சிம்புவை ஒப்பந்தம் செய்யவே பலர் பயந்தனர். படத்திற்கு பிரச்சனை வந்துவிடுமோ என்கிற அச்சம். அதில் நியாயமும் இருந்தது. அப்படி சிக்கலை கடந்தும் வெளியான படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. அதற்கு உதாரணம், சமீபத்தில் வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் மற்றும் ஈஸ்வரன் ஆகிய படங்கள். அவரை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என்பதில் அவரது தாயும், தந்தையும் போராடினார். முடிந்திருந்த அனைத்து சிக்கல்களையும் ஒவ்வொன்றாக அவிழ்த்தனர். ஆனால் அதற்கும் காலம் தேவைப்பட்டது.
அப்படி காலம் கடந்து... பல்வேறு சிக்கலை சந்தித்து, உடைத்து, தகர்ந்து 2021 இறுதியில் இன்று வெளியாகியிருக்கிறது மாநாடு. வருமா... வராதா என்று கடைசி நொடி வரை எதிர்பார்ப்பை எகிற வைத்து வெளியாகியிருக்கும் மாநாடு... பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. 2010 ல் விண்ணைத்தாண்டி வருவாயா மூலம் வெற்றியை சுவைத்த சிம்பு... அதன் பின் இன்னொரு வெற்றியை சுவைக்க 11 ஆண்டுகள் காத்திருக்க நேர்ந்தது.
சிம்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ஒவ்வொரு காலகட்டத்திலும் பலரும் கூறியுள்ளனர். ஏன்... அவரே அவர் மீது குறைகளை கூறியுள்ளார். இதெல்லாம் அவர் இமேஜ்ஜை குறைத்ததா என்றால், இல்லை என்பதை மாநாடு வெற்றி மூலம் அறிய முடிகிறது. இன்னும் கூட அவர் தன் மீதான குறைகளை அறிய முன்பே முற்பட்டிருந்தால் தனுஷ் வேகத்திற்கு அவரும் பறந்திருப்பார். ஆனால், அவர் தன் மீது வைக்கப்பட்ட குறைகளுக்கு விளக்கம் மட்டுமே அளித்துக் கொண்டிருந்தார். சமீபத்தில் அவர் மாறியிருப்பதாக தெரிகிறது. செயல்பாடுகளும் அப்படி இருக்கிறது. மாநாடு மீண்டும் அவருக்கு ரசிகர் பட்டாளத்தை திரட்டலாம்! 2002 ல் அவர் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அடுத்த ஆண்டு வந்தால் அவரது 20 ஆண்டு சினிமா பயணம் நிறைவடையும். இந்த 20 ஆண்டு பயணத்தில், அவரது சமீபத்திய வெற்றியை ருசிக்க, 11 ஆண்டுகளை அவர் எடுத்துக் கொண்டார். இனியாவது அவருக்கு எல்லாம் வெற்றியாக மாறட்டும்!