நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படம் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிம்பு  “ ரொம்ப பிரச்னை கொடுக்குறாங்க.. ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்.. பிரச்னைகளை நான் பார்த்துக்கொள்கிறேன்.. என்னை ரசிகர்களாகிய நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று பேசினார். இந்த விழாவில் பாரதிராஜா, யுவன், எஸ்ஜே சூர்யா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, வெங்கட் பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


அரசியல் கதையாக உருவாகியுள்ள மாநாடு படத்தில், சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷினி நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஒய்.ஜி.மகேந்திரன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.



மாநாடு படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கடந்த 11ஆம் தேதி படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில் திடிரென படம் தீபாவளிக்கு வெளியாகது என படக்குழு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.


இதனையடுத்து கடந்த சில நாள்களுக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த சிம்புவின் தந்தை டி. ராஜேந்தர், “மாநாடு படத்தை வெளியிடவிடாமல் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள். சிம்புவுக்கு தொடர்ந்து கொலைமிரட்டல் வருகிறது.  அவருக்கு நெருக்கடி கொடுக்கவே மாநாடு முடக்கப்பட்டுள்ளது. மாநாடு படத்தை வெளியிடாவிட்டால் நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் வீட்டு முன் உண்ணாவிரதம இருப்போம்” என்றார். டி. ராஜேந்தரின் இந்தக் குற்றச்சாட்டு சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த நிலையில் AAA படத்தின் தயாரிப்பாளர், தான் அந்தப் படத்தின் மூலம் நஷ்டமடைந்துள்ளதாகவும், அதை சரி செய்வதாக உறுதியளித்த சிம்பு அதன் பின்னர் தொடர்பில் அவர் வரவில்லை என்றும் இதனால் ஏற்ப்பட்ட நஷ்டத்தின் காரணமாக தன்னால் மேலும் படங்களை தயாரிக்க முடியவில்லை என்றும் கூறினார். மேலும், பொய்யான தகவல்கள் வெளியிடும் சிம்பு தரப்பு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். இந்த நிலையில்தான் இன்று மாநாடு படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவின் போதுதான் சிம்பு கண்ணீர் விட்டு அழுதார். 


 


முன்னதாக,


2016ஆம் ஆண்டு மைக்கேல் ராயப்பன் சிம்புவை வைத்து “அன்பானவன் அடங்காதவன் அசராதவன்” என்ற படத்தை தயாரித்தார். அப்போது படத்தை பாதியில் முடித்துவிட்டு வெளியிடுமாறும் அப்படி ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டால் இன்னொரு படம் இலவசமாக நடித்துகொடுப்பதாக சிம்பு உறுதியளித்தார். ஆனால் அவர் சொன்ன்படி நடித்துக்கொடுக்கவில்லை. 


சிம்புவை நம்பி அப்படத்தை பாதியில் வெளியிட்டதால்  தனக்கு ரூ 15 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு மீது புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.