‛முன்பே வா... என் அன்பே வா...’ இந்த பாடல் ஒளிக்காத மியூசிக் சேனல்கள் இருக்க வாய்ப்பில்லை. 2006ல் இருந்து இன்று வரை பலரின் ரிங்டோனாகவும் இருக்கிறது. சில்லுனு ஒரு காதல். காதலலே குளுமையானது, அதிலிலும் குளுமையான காதல் என்றால்? அது தான் படத்தோட தீம்.


குழந்தையோடு மகிழ்வாக வாழும் ஒரு தம்பதி. இருவரும் பணியாளர்கள். வேலைக்கு போக, வீட்டுக்கு வர, மகளுடன் கொண்டாட என ஜாலியாக போகும் வாழ்க்கை. இதற்கிடையில், வீட்டை சுத்தம் செய்யும் போது, தன் கணவரின் பழைய பொருட்களை பார்க்கிறாள் மனைவி. அதிலிருந்து ஓப்பனாகும் ப்ளாஷ்பேக்கில் கல்லூரியில் கணவன் செய்த சேட்டைகள், அங்கு அவனுக்கு நேர்ந்த காதல், அதன் பின் அவளுடன் நடந்த திருமணம், பின்னர் எதிர்ப்பால் நேர்ந்த முறிவு என அனைத்தும் மனைவிக்கு தெரிய வருகிறது. 






கணவன் விரும்பிய பெண்ணை, மீண்டும் அவருடன் சந்திக்க வைத்து அவனை மகிழ்விக்க விரும்புகிறாள் மனைவி. அந்த பெண்ணை சந்தித்து, வீட்டுக்கு அழைத்து வருகிறாள். பல ஆண்டுகளுக்கு பின் தன் காதலியை சந்திக்கும் அந்த கணவன், அவளோடு சேர்ந்தானா? மனைவியின் நிலை என்ன? என்பது தான் சில்லுனு ஒரு காதல். 


சூர்யா-ஜோதிகா-பூமிகா என மூன்று பேருக்குள் நடக்கும் காதல் போராட்டம். எந்த காதல் நியாயமானது என்கிற குழப்பத்திற்கு விடையே இருக்காது. பார்வையாளர்கள் கொஞ்சமல்ல, ரொம்பவே பரவசமடைய நேரிடும். அந்த அளவிற்கு கேள்விகளுக்கு முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டிருக்கும். 


போதும் போதும் என்கிற அளவிற்கு ஜாலியாக இருந்துவிட்டு, திடீரென அப்படியே அதற்கு நேர்மறையான வாழ்விற்கு வரும் போது, அந்த குடும்பம் சந்திக்கும் துன்பங்களும், கண்ணீரும் கொஞ்சம் நம்மை நெருடத்தான் செய்யும். கெளதம், ஐஸ், குந்தவி என கதாபாத்திரங்களின் பெயரை சொல்லி அழைக்கும் அளவிற்கு, அவ்வளவு கச்சிதமான நடிப்பு. அதிலும் ஜோதிகாவின் நடிப்பு பிரமாதம். கணவரின் ஆசையை நிறைவேற்றிவிட்டு, தன் கணவரை இன்னொரு பெண்ணிடம் விட்டுச் செல்கிறோமே என கண்ணீருடன் குழந்தையை தூக்கிச் செல்லும் போது அவர் படும் பாடு பார்க்கவே கண்ணீர் வரவழைக்கும்.






உயிரோடு கலந்த மனைவி இருக்கும் போது, உயிருக்கு உயிராய் இருந்த காதலி கண் முன் வந்து நிற்கும் போது, என்ன செய்வது என்று தெரியாமல், நாதழுவ நிற்கும் அந்த காட்சிகள் இன்னும் உயிர்ப்பாய் இருக்கும். உண்மையிலே அது ஒரு சில்லுனு ஒரு காதல் தான். ஏ.ஆர்.ரஹ்மானின் அனைத்து பாடல்களும்  பின்னணி இசையும் காதலை இனிய காற்றாக நம்மிடம் கொண்டு வந்திருக்கும்.


ஷப் ஜானின் திரைக்கதையும், என்.கிருஷ்ணாவின் இயக்கமும், ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவும், படத்திற்கு பெரிய பலமாக இருக்கும். வடிவேலு காமெடி ட்ராக், இன்னும் நம்மை சிரிக்க வைக்கும். ஸ்டூடியோ கிரீன் தயாரித்த இத்திரைப்படம், அப்போது இளைஞர் பட்டாளத்தின் இனிய விருப்பமாகவும், தியேட்டர்களில் படையெடுக்கவும் வைத்தது. 2006 ம் ஆண்டு இதே நாள், இதே தேதியில் வெளியான இத்திரைப்படம், 16 ஆண்டுகளை கடந்தும், இன்றும் சேனல்களில் அடிக்கடி ஒளிபரப்பாகும் படமாகவும் உள்ளது.