லவ் டுடே படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதனிற்கு நடிகர் சிலம்பரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோமாளி இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் இயக்கத்தில் “லவ் டுடே” படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற் பை பெற்று வருகிறது. இந்த படத்தின் இயக்குநரான பிரதீப் ரங்கநாதனே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். வார இறுதிநாட்களான சனி மற்றும் ஞாயிற்றுகிழமையை விட வார நாட்களில் நல்ல வசூலை இப்படம் பெற்று வருகிறது என்றும் இந்த படம் வசூல் ரீதியாக புது சாதனையை படைக்கபோகிறது என்றும் சொல்லப்படுகிறது.
பெரும்பாலும், அறிமுக ஹீரோக்களுக்கு இப்படிப்பட்ட வரவேற்பு கிடைப்பது மிக மிக அரிதான விஷயமாக சினிமாவில் பார்க்கப்படும் நிலையில், இந்தக் கருத்தை, பிரதீப் “லவ் டுடே” படம் மூலம் சுக்கு நூறாக உடைத்துள்ளார் என சொல்லப்படுகிறது.
லவ் டுடே படம் வசூல் வேட்டை புரிந்து வரும் நிலையில் பல்ரும் பிரதீப் ரங்கநாதனுக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினம் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் ரஜினிகாந்த் பிரதீப்ரங்கநாதனை நேரில் அழைத்து வாழ்த்தினார். இந்த நிலையில் இன்றைய தினம் நடிகர் சிலம்பரசன் படத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பூங்கொத்து ஒன்றை அனுப்பி இருக்கிறார். இதனை வீடியோ எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் பிரதீப், “
நீங்கள் பேசிய முதல் தொலைப்பேசி அழைப்பு தொடங்கி, தற்போது வரை எனக்கும் லவ் டுடே படத்திற்கும் நீங்கள் கொடுக்கும் ஆதரவு உண்மையில் பெரிய விஷயம்.மிக்க நன்றி சிலம்பரசன்" என்று பதிவிட்டு இருக்கிறார்.
முன்னதாக ரஜினிகாந்தை சந்தித்தது குறித்து பதிவிட்ட பிரதீப் “ இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும். சூரியனின் பக்கத்தில் உள்ளது போல் இதமாக இருந்தது. அழுத்தமான அரவணைப்பும், அந்த கண்களும், அந்த சிரிப்பும் , அந்த ஸ்டைலும், அன்பும் ... என்ன ஒரு மனுஷன்... சூப்பர் ஸ்டார் ரஜினி லவ் டுடே படத்தை பார்த்து என்னிடம் வாழ்த்து தெரிவித்தார். நீங்கள் கூறிய வார்த்தைகளை நான் மறக்க மாட்டேன் சார்.” என்று பதிவிட்டு இருந்தார்.