மன்மதன்
கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படம் மன்மதன். சிம்பு, ஜோதிகா, கவுண்டமனி, சிந்து தொலானி சந்தானம் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள், யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். கிரைம் த்ரில்லராக உருவாகி இருந்த இந்தப் படத்தில் சிலம்பரான் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மன்மதன் படம் நல்ல வெற்றையைப் பெற்றிருந்தாலும் விமர்சன ரீதியாக நிறைய மாற்றுக் கருத்துக்கள் ரசிகர்களுக்கு இருந்தன. மேலும் படத்தின் இயக்குநர் முருகன் சில ஆண்டுகள் முன்பாக படம் குறித்து பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
நெகட்டிவ் விமர்சனம்
ஆண்களை காதலிப்பதாக கூறி அவர்களை ஏமாற்றும் பெண்களை கொடூரமாக கொலை செய்பவராக சிலம்பரசன் இந்தப் படத்தில் நடித்திருந்தார். பெண்களுக்கு எதிரான வெறுப்பை கொட்டுவதாக இந்தப் படத்தின் மீது விமர்சனங்கள் வைக்கப் பட்டன. மேலும் பெண்களைப் பற்றிய மேம்போக்கான ஆணாதிக்க கருத்துக்களை இந்தப் படம் முன்வைப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
இயக்குநர் கிளப்பிய சர்ச்சை
மன்மதன் படத்திற்கு எழுந்த மிகப்பெரிய சர்ச்சை என்றால் படத்தில் இயக்குநர் முருகன் சில ஆண்டுகளுக்கு முன் நேர்காணல் ஒன்றில் பேசியது. மன்மதன் திரைப்படத்தின் கதையை தான் முதலில் நடிகர் அஜித் குமாரிடம் சொன்னதாகவும் அவர் எந்த பதிலும் தெரிவிக்காததால் இந்தக் கதையை சிலம்பரசனிடம் தான் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சிம்பு இந்தப் படத்தின் கதையை தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்திடம் சொல்லியிருக்கிறார். இந்தப் படத்தை தயாரிக்க சம்மதித்த அவர் முன்பணமாக முருகனுக்கு 25 ஆயிரம் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்குப் பிறது இயக்குநர் முருகனுக்கு அழைத்த தயாரிப்பாளர் இந்தப் படத்தின் கதை மற்றும் திரைக்கதையில் சிலம்பரசன் தனது பெயரை போட ஆசைப்படுவதாக அவர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சிலம்பரசனின் அம்மாவிடம் இயக்குநர் முருகன் அழைத்து பேசியபோது அவர் தன்னிடம் மிக மோசமாக பேசியதாகவும் சிம்புவின் பெயரை போடாவிட்டால் இந்தப் படத்தை இயக்க முடியாது என்று அவர் கூறியதாக முருகன் தெரிவித்தார்.
தன்னுடைய முதல் படம் என்பதால் தான் வேறு வழியில்லாமல் இதற்கு ஒத்துக்கொண்டதாக அவர் கூறினார். மேலும் 14 ஆண்டுகள் கழித்து இதை வெளியில் சொன்ன முருகன் தனக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை சிம்பு வழங்குவதாக சொன்னதாகவும் கூறினார். ஆனால் இதில் எதுவுமே நடக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். மேலும் மன்மதன் படத்தின் இரண்டாம் பாகத்தில் கதையை தான் அதர்வாவிடம் சொல்ல இருந்ததாகவும் ஆனால் அது நடக்காமல் போனதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று 19 ஆண்டுகளை கடந்துள்ள மன்மதன் திரைப்படத்திற்குப் பின் இப்படியான பல்வேறு சர்ச்சைகள் தீர்க்கப்படாமல் நீடித்து வருகின்றன.