தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் சைமா விருதுகளை வென்ற பிரபலங்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.
2022 ஆம் ஆண்டிற்கான SIIMA விருதுகள் வழங்கும் விழா பெங்களூரில் நடந்து கொண்டிருக்கிறது. நேற்று (10-09-2022) மற்றும் இன்று (11-09-2022) ஆகிய இரு நாட்கள் நடைபெறக்கூடிய இந்த விழாவில் கே.ஜி.எஃப் நடிகர் யஷ், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் தற்போது தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் சைமா விருதுகளை வென்ற பிரபலங்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கு சினிமாவை பொருத்த வரை சிறந்த படத்திற்கான விருது அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்திற்கும், சிறந்த இயக்குநருக்கான விருது அந்தப்படத்தை இயக்கிய இயக்குநர் சுகுமாருக்கும், சிறந்த நடிகருக்கான விருது அதில் நடித்த அல்லு அர்ஜூன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகருக்கான கிரிட்டிக்ஸ் விருது ஜதி ரத்னலு படத்திற்காக நவீன் பாலிஷெட்டிக்கு வழங்கப்பட்டுள்ளது. யூத் ஐகான் விருது நடிகைகளில் பூஜா ஹெக்டேவுக்கும், நடிகர்களில் விஜய் தேவரகொண்டாவிற்கும் வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த துணை நடிகைக்கான விருது நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கிராக் படத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. சிறந்த துணை நடிகருக்கான விருது புஷ்பா படத்தில் நடித்த நடிகர் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரிக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருது உப்பென்னா படத்தை இயக்கிய புச்சி பாபு சனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த பாடலாசிரியருக்கான விருது புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளி பாடலை எழுதிய சந்திரபோஸூக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த இசையமைப்பாளருக்கான விருது புஷ்பா படத்திற்காக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த அறிமுக நடிகைக்கான விருது உப்பென்னா படத்தில் நடித்த க்ரித்தி ஷெட்டிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஹிந்தியில் மிகவும் பிரபலமான நடிகருக்கான விருது ரன்வீர் சிங்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. அதே போல ஒரிஜினல் பான் இந்தியா ஸ்டாருக்கான விருது நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கன்னட சினிமா:
கன்னட சினிமாவை பொருத்த வரை மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு யுவரத்னா படத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகைக்கான விருது மதகஜா படத்தில் நடித்த ஆஷிகா ரங்கநாத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த துணை நடிகைக்கான விருது த்ரிஷ்யா 2 படத்திற்காக ஆரோஹி நாராயணுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த வில்லனுக்கான விருது ஹீரோ படத்திற்காக பிரோமோத் ஷெட்டிக்கு வழஙகப்பட்டுள்ளது.