சித்தார்த் நடித்து சு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சித்தா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதற்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், படத்தில் வில்லனாக நடித்த  நடிகர் தர்ஷன் உணர்ச்சிவசப்பட்டு சித்தார்த் காலில் விழுந்தார்.


சித்தா


பண்ணையாரும் பத்மினியும் ,சேதுபதி, சிந்துபாத் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய சு. அருண்குமார் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியான திரைப்படம் சித்தா. சித்தார்த், மலையாள நடிகர் நிமிஷா சஜயன் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். திபு நினன் தாமஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். சித்தார்த்தின் தயாரிப்பு நிறுவனமான எடாகி இந்தப் படத்தை தயாரித்துள்ளது.


சித்தா படத்தின் கதை


பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் நிகழ்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் சித்தா. மிக தீவிரமான ஒரு சமூக பிரச்சனையை எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை புண்படுத்தாமல் மிக நேர்த்தியாக கையாளப்பட்ட ஒரு படம் என்று சித்தா படத்தை சமூக வலைதளங்களில் விமர்சகர்கள் பாராட்டி வருகிறார்கள்.


தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நடிகர் சித்தார்த், சித்தா படத்தின் மூலம் ஒரு நல்ல வெற்றியை பதிவு செய்திருக்கிறார். மேலும் இந்தப் படத்தை தானாக முன்வந்து தயாரித்ததற்காக பலர் அவரை பாராட்டி வருகிறார்கள். மேலும் இயக்குநர் அருண் குமார் இயக்குநராக எடுத்துக் கொண்டிருக்கும் பொறுப்பும் அனைவரின் மனதை கவர்ந்துள்ளது. சித்தா திரைப்படத்தை பார்த்து வரும் தமிழ் திரையுலக பிரபலங்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் சித்தா திரைப்படத்தின் நன்றி பாராட்டும் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த் இயக்குநர் அருண்குமார்  படத்தின் வில்லனாக நடித்த நடிகர் தர்ஷன் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டார்கள்.


உணர்ச்சிவசப்பட்ட தர்ஷன்


சித்தா திரைப்படத்தில் பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளி கதாபாத்திரத்தில் நடிகர் தர்ஷன்  நடித்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் மேடையில் உணர்ச்சிவசப்பட்டு பேசினார். “ நான் சினிமாவில் இருபது ஆண்டுகள் சிரமப்பட்டிருக்கிறேன். வாய்ப்புக் கேட்டு ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்கியிருக்கிறேன். எனக்கு முதல் முதலாக ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தவர் இயக்குநர் சசி. பிச்சைக்காரன் படத்தில் எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரத்தை கொடுத்தார்.


ஆனால், இப்போது எனக்கு சித்தா திரைப்படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரத்தை கொடுத்து எனக்கு மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்திருக்கிறார்கள் இயக்குநர் அருண்குமார் மற்றும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சித்தார்த். முதலில் இயக்குநர் என்னிடம் இந்த கதாபாத்திரத்தை சொன்ன போது இவ்வளவு கனமான ஒரு கதாபாத்திரத்தை எப்படி ஏற்று நடிக்கப் போகிறோம் என்கிற பயத்தில் இருந்தேன். பிறகு நடிகர் சித்தார்த்திடம் என்னை அறிமுகப்படுத்தினார் அருண்.


சித்தார் காலில் விழுந்தார்:


சித்தார்த்த் என்னிடம் தர்ஷன் நீங்கள் இயக்குநர் அருண் குமார் சொல்வது போல் நடித்தால் போதும் என்று சொன்னார். இந்தப் படத்தைப் பார்த்த அனைவரும் எப்படி இப்படியான ஒரு கதாபாத்திரத்தை இவ்வளவு பிரமாதமாக நடித்தீர்கள் என்று கேட்கிறார்கள். ஆனால் நான் இயக்குநர் அருண்குமார் என்னை எப்படி நடிக்கச் சொன்னாரோ நான் அப்படியே செய்தேன் வேறு எதுவும் செய்யவில்லை. தனக்கு ஒரு ஷாட் பிடிக்கும் வரை என்னை விடாமல் மீண்டும் மீண்டும் நடிக்க வைத்தார் அதனால் தான் இந்த கதாபாத்திரம் இவ்வளவு நன்றாக வந்ததற்கு காரணம். இந்தப் படத்தில்  நடிக்க எனக்கு வாய்ப்பளித்த அருண்குமார் மற்றும் சித்தார்த் அவர்களுக்கு நன்றி “ என்று தர்ஷன் கூறினார். இதனைத் தொடர்ந்து மேடையில் இருந்த சித்தார்த் மற்றும் அருண்குமார் ஆகிய இருவரின் காலில் விழுந்தார்.