தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஜம்மனஹள்ளி கிராமத்தைச் சார்ந்த செல்வம் தச்சு தொழில் செய்து வருகிறார். கோவையில் தச்சு தொழில் செய்து வரும் செல்வம் மாதத்திற்கு ஒரு முறை, பெற்றோரை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை கோவையிலிருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்பொழுது தனது நண்பர்களான சரவணன், செல்வம், ரகு, பிரகாஷம் ஆகியோருடன் இணைந்து ஜம்மனஹள்ளியில் உள்ள பாலத்தின் மீது அமர்ந்து மது அருந்துள்ளனர். மேலும் இரவு முழுவதும் செல்வம் வீட்டிற்கு வராமல், நண்பர்களோடு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காலை பாலத்திற்கு அடியில் செல்வம் சடலமாக கிடந்ததை பள்ளிக்கு வந்த அவரது தம்பி மகன் பார்த்துள்ளார். இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், செல்வத்தை மீட்டுள்ளனர். அப்பொழுது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்துள்ளது. அதேபோல் காதில் ரத்தம் வந்த நிலையிலே இருந்துள்ளது. இதனால் கோபிநாதம்பட்டி கூட்ரோடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் செல்வம் உடலை பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலை, முகம், கை, கால்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதாலும், காதில் ரத்தம் வந்த நிலையில் இருந்ததாலும், செல்வத்தை யாரோ அடித்து கொலை செய்து பாலத்திற்கு அடியில் வீசி இருக்கலாம். எனவே செல்வத்துடன் மது அருந்திய நண்பர்களை விசாரணை செய்ய வேண்டும். செல்வம் தவறி விழுந்து இறப்பதற்கு சாத்தியம் இல்லை. கொலை செய்து வீசி இருக்கிறார்கள் என உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து செல்வத்தின் நண்பர்களான சரவணன், செல்வம், ரகு, பிரகாஷ், ஆகிய நான்கு பேரையும் கோபிநாதம்பட்டி கூட்ரோடு காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் குடியிருப்புகளை ஒட்டி எந்நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் சாலையோரமே பாலத்திற்கு அடியில் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தருமபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பாப்பாரப்பட்டியில் ஒரு கொலையும், நேற்று குண்டல்பட்டியில் ஒரு கொலையும் நடைபெற்றுள்ள நிலையில், இன்று மேலும் ஒருவர் மர்மமான முறையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் இரண்டு கொலைகள் நடைபெற்றுள்ள நிலையில், இன்று மேலும் ஒருவர் மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் காவல் துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.