தெலுங்கு திரையுலகில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் சர்வானந்த். தமிழியில் எங்கேயும் எப்போதும் படத்தின் கவுதம் எனும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் சர்வானந்த் - ரக்ஷிதா திருமணத்தில் பாட்டுப் பாடி கவனம் ஈர்த்தார் நடிகர் சித்தார்த்.
அதைதொடர்ந்து, ஜேகே எனும் நண்பனின் கதை எனும் படத்தில் நடித்தார். பின்பு தெலுங்கு திரைப்படங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வந்த சர்வானந்த் நடிப்பில், அண்மையில் கணம் எனும் திரைப்படம் தமிழில் வெளியானது. டைம் டிராவல் தொடர்பான அந்த படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே, 38 வயதான சர்வானந்த் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், விரைவில் அவருக்கு திருமணம் நடைபெற உள்ளதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனாலும், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமலேயே இருந்தது. இந்நிலையில் தான், தனது நீண்ட நாள் காதலியான ரக்ஷிதா ரெட்டியுடன் நிச்சயம் ஆன புகைப்படங்களை சர்வானந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறிய நிலையில் தற்போது அவரது திருமணமும் இனிதே நடந்து முடிந்துள்ளது.
மறைந்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் பொஜ்ஜாலா கோபால் கிருஷ்ணா ரெட்டியின் பேத்தியும், ஐதராபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மதுசூதன் ரெட்டியின் மகளுமான, ரக்ஷிதா ரெட்டி உடன் தான் சர்வானந்திற்கு திருமணமாகியுள்ளது.ரக்ஷிதா ரெட்டி அமெரிக்காவில் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றி வருகிறார்.
ஜெய்ப்பூரில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் சூழ சர்வானந்தின் திருமணம் கோலாகலமான நடைபெற்ற நிலையில், ஹல்தி விழாவில் மஞ்சள், சந்தனம் பூசி குடும்பத்தார் மகிழும் வீடியோ நேற்று இணையத்தில் வெளியாகி லைக்ஸ் அள்ளியது.
டோலிவுட், கோலிவுட் என சினிமா வட்டாரத்தில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சர்வானந்த். ‘எங்கேயும் எப்போதும்’ ‘ஜேகே எனும் நண்பனின் கதை’, ‘காதல்னா சும்மா இல்லை’ ஆகிய தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர்.
குறிப்பாக கமலினி முகர்ஜியுடன் இவர் இணைந்து ஆடிய ‘என்னமோ செய்தாய் நீ’, எங்கேயும் எப்போது படத்தில் இடம்பெற்ற ‘உன் பேரே தெரியாது...’ ஆகிய பாடல்கள் அன்றைய காலக்கட்டத்தில் பெரும் ஹிட் அடித்தன.
நடிப்பு தாண்டி, வணிக குடும்ப பின்புலத்தைக் கொண்ட சர்வானந்த் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியின் உறவுக்காரர் ஆவார்.
சர்வானந்த் திருமண விழாவில், நடிகர் சித்தார்த் ஓயே ஓயே பாடலைப் பாடி கவனம் ஈர்த்தார். அந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்தார். அதில் அவர், நாங்கள் அங்கே இருந்தோம். அது மாயாஜாலம் போன்ற நிகழ்வு. என் மனம் நிறைந்துவிட்டது. உங்கள் இருவருக்கும் என் அன்பை உரித்தாக்குகிறேன். வாழ்க்கை அழகானது என்று பதிவிட்டுள்ளார்.