செப்டம்பர் 10ம் தேதியான இன்றைய தினம் உலக தற்கொலை தடுப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் பொது மக்களிடையே தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபடும் விதமாக விழிப்புணர்வு வாக்கத்தான் ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் 500 மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாக்கத்தானில் பங்கேற்றனர். இந்த நிகழ்வுக்கு கொடியசைத்து வாக்கத்தானை துவங்கி வைத்தார் நடிகர் சித்தார்த். 


தற்கொலை விழிப்புணர்வு நிகழ்ச்சி :


இந்த வாக்கத்தானில் கலந்து கொண்ட நடிகர் சித்தார்த் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் பேசுகையில் " 'சினேகா' என்ற என்.ஜி.ஓ அமைப்பு ஒன்று பல ஆண்டுகளாக தற்கொலை எண்ணம் மோலோங்கியுள்ள நபர்களுக்கு உதவியாக கவுன்சலிங் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்தி தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபட உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.


 



உறுதுணையாக இருக்கும் அமைப்பு :


இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் மக்கள் பெருபாலானோர் வாழ்க்கையில் அவர்கள் தினம் தினம் சந்திக்கும் போராட்டங்களை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலைக்கு தூண்டப்படுகிறார்கள். இது போன்ற நெகட்டிவான எண்ணம் கொண்டவர்கள் 'சினேகா' என்ற இந்த அரசு சார்பற்ற அமைப்பை  தொடர்பு கொள்ளலாம். அவர்கள் அந்த நபர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், மோட்டிவேஷனும் கொடுத்து அவர்களை இது போன்ற தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட உதவியாக இருப்பார்கள்" என கூறினார்.


சித்தார்த்தின் சர்ச்சையான பதில் :


இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் இந்தியா - பாரத் பெயர் மாற்றம் குறித்த அவரின் கருத்து குறித்து கேட்கப்பட்டது. அப்போது சித்தார்த் பத்திரிகையாளரின் கேள்வியும் புறக்கணிக்கும் வகையில் "நான் இங்கு வந்ததற்கான காரணம் இந்த தற்கொலை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மட்டுமே. நான் என்னுடைய வேலையை செய்து கொண்டு இருக்கிறேன்.


நீங்களும் உங்களுடைய வேலையை மட்டும் பாருங்கள். நாம எல்லாரும் இந்தியால சென்னையில நடக்கும் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து பேசிகிட்டு இருக்கோம். இந்த இடத்துல எந்த பெயரை யார் வைச்சா என்பது எல்லாம் தேவையில்லாத ஆணி. அதனால நாம எந்த விஷயத்துக்காக வந்து இருக்கோமோ அதை பத்தி மட்டும் பேசுவோம்" என பதிலளித்து இருந்தார். அவரின் இந்த பதில் சோசியல் மீடியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பரபரப்பை பரப்பி வருகிறது. 



இந்திய நாட்டின் பெயர் பாரத் என மாற்றப்பட இருப்பதாக வெளியான தகவல் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவாகரத்திற்கு பலரும் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வரும் நிலையில் திரை பிரபலங்கள் பலரும் அவர்களின் கருத்துக்களை இது குறித்து முன் வைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.