தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹாலிவுட் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ள நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு இந்த 2022ம் ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்தது. ஹாலிவுட் திரைப்படமான 'தி ஐ' படம் தொடங்கி பிரபாஸுடன் சலார், பாலகிருஷ்ணாவுடன் வீர சிம்ஹா ரெட்டி மற்றும் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா வரை கைநிறைய படங்களோடு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்தது. 


 



வீர சிம்ஹா ரெட்டி படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் ஸ்ருதி ஹாசன்


 


ஹாலிவுட் என்ட்ரி :


ஸ்ருதி ஹாசனின் 'ஷி இஸ் ஹீரோ' பாடல் இந்த ஆண்டு வெளியாகி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இந்த ஆண்டின் வெற்றி குறித்து ஸ்ருதி ஹாசன் பதிலளிக்கையில் " தி ஐ ஸ்கிரிப்டில் நான் நடித்ததை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். அப்படத்தில் நடித்தது மிகவும் உற்சாகமாக இருந்தது. மிகவும் அழகான கதை, கதாபாத்திரம் மட்டுமின்றி பெண்களால் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான திரைப்படம். எழுத்து, இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என முற்றிலும் பெண்களால்  உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம்" என்றார் ஸ்ருதி. 


 


ஒரே நேரத்தில் இரண்டு ரிலீஸ் :


ஸ்ருதி ஹாசன் நடித்துள்ள வீர சிம்ஹா ரெட்டி மற்றும் வால்டர் வீரய்யா ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நேரத்தில் ஜனவரி 2023ல் வெளியாகவுள்ளது. ஒரு நடிகைக்கு ஒரே நேரத்தில் இரண்டு பெரிய திரைப்படங்கள் வெளியாவது அரிது. அது குறித்து உங்களின் மனநிலை பதட்டமாக இருக்கிறதா அல்லது உற்சாகமாக இருக்கிறதா என் கேட்ட கேள்விக்கு ஸ்ருதி பதிலளிக்கையில் "இதுகுறித்து பதட்டப்பட முடியாது. நாங்கள் அனைவரும் கடுமையாக உழைத்துள்ளோம். எங்களால் முடிந்ததை முழுமையாக செய்துள்ளோம் என நினைக்கிறன். நானும் அதில் ஒரு பங்கு வகிப்பதில் மகிழ்ச்சி" என்றார் ஸ்ருதி.


 






 


மெகா ஸ்டார்களின் ஜோடி :


முதல் முறையாக நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து ஸ்ருதி கூறுகையில் "அவருடன் பணிபுரிந்த அனுபவம் மிகவும் சுவாரஸ்யமாகவும், வேடிக்கையாகவும் இருந்தது. பாலகிருஷ்ணா நேர்மையானவர் மற்றும் திறமையானவர். அவருடன் பணிபுரிந்ததன் மூலம் அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. மேலும் மீண்டும் சிரஞ்சீவி போன்ற ஒரு ஜாம்பவான் உடன் மீண்டும் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. வால்டர் வீரய்யா படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடைபெற்றது. அதற்காக அவருடன் பயணம் செய்தது உற்சாகமாக இருந்தது" என பரவசத்துடன் தெரிவித்தார் நடிகை ஸ்ருதி ஹாசன்.