சமீபகாலமாக இந்திய சினிமாவில் கோலிவுட் பாலிவுட் விவாதங்கள் நிறையவே எழுந்து வருகின்றன. பல்வேறு நடிகர்களும் தங்களது கருத்துகளை இதுதொடர்பாகப் பதிவு செய்து வருகின்றனர். கங்கனா ரனாவத் தென்னிந்திய சினிமாவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். தென்னிந்திய சினிமா நடிகர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் கலாசாரத்தில் வேரூன்றி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மற்றொரு பக்கம் நடிகர் அக்‌ஷ்ய குமார் தனக்கு இந்த விவாதமே பிடிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.





அண்மையில் விக்ரம் திரைப்படத்துக்கான ப்ரோமோவில் ஈடுபட்டிருந்த நடிகர் கமல்ஹாசன் ‘எனக்கு தாஜ்மஹால் மீது எவ்வளவு உரிமை உள்ளதோ அதே அளவு உங்களுக்கு மீனாட்சி கோவில் மீதான உரிமை உள்ளது.எனக்கு காஷ்மீர் எத்தனை நெருக்கமோ அந்த அளவிற்கு உங்களுக்கு கன்னியாகுமரி நெருக்கம்’ என பதில் அளித்துள்ளார். 


இதை அடுத்து அவரது மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் ‘நான் தெற்கு மற்றும் வடக்கின் கலவை.நான் பன்மொழி பேசிய குடும்பத்தில் வளர்ந்தவள்’ எனக் குறிப்பிட்டுள்ளார். நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சரிகாவின் மகளான ஸ்ருதிஹாசன் தனது பெற்றோர்கள் பல்வேறு மொழி சினிமாக்களில் நடித்ததை நினைவு கூர்ந்துள்ளார். ‘அப்பா தமிழைக் கடந்து பல மொழிகளில் நடித்தார். அம்மா இந்தியைக் கடந்து பல மொழிகளில் நடித்தார்.அதனால் இரண்டு பேரையும் கவனித்துதான் நான் வளர்ந்தேன்’ என அவர் குறிப்பிட்டுள்ளார். 







ஸ்ருதிஹாசன் நடிகர் பிரபாஸுடன் இணைந்து சலார் என்கிற தெலுங்கு படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதனை கே.ஜி.எப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்குகிறார்.