பிறந்த நாள் கொண்டாட்டமாக, ஜனவரி 27 முதல் சமூக தலைப்புகளில் ரசிகர்களுடன் நேரலை நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளதாக நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.  


தென்னிந்திய திரைத்துறையின் முன்னணி நடிகையும், பாடகியுமான ஸ்ருதி ஹாசன் தனது பிறந்தநாளை வரும் ஜனவரி 28 ஆம் தேதி கொண்டாடவுள்ளார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ஸ்ருதி ஹாசனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


இந்த ஆண்டு, ஸ்ருதிஹாசன் தனது பிறந்தநாளில், நமது சமூகம் மற்றும் சுற்றுப்புறம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ரசிகர்களுடன் உரையாட முடிவு செய்துள்ளார். இதனையொட்டி மனநலம், திரைப்படம்  மற்றும் ஊடகங்களில் பெண்கள்,  ஃபேஷன் துறையின் நிலைத்தன்மை போன்ற தலைப்புகளில், சமூக வலைதள பக்கத்தில் ஜனவரி 27 முதல் அவர் தொடர்ச்சியான நேரலை நிகழ்வுகளை நடத்தவுள்ளார். 






இந்த நேரலை நிகழ்வுகள் மூலம், ஸ்ருதிஹாசன்,  பொதுவாக சமுகத்தில் விவாதிக்க மறுக்கப்படும், பல தலைப்புகளில் விவாதங்களை, உரையாடலை மேற்கொண்டு, அந்த விசயங்களின் மீது கவனத்தை ஈர்க்க விரும்புகிறார். இந்த  நேரலை அமர்வுகளில்  ஸ்ருதிஹாசன் பல்வேறு செல்வாக்கு மிக்க பிரபலங்கள் மற்றும் தொகுப்பாளர்களுடன் இணைந்து,  இந்த தலைப்புகளைப் பற்றி விரிவாக விவாதிப்பார். நம் சமூகத்தில் பேச மறுக்கப்படும் விஷயங்களை பற்றி உரையாடலை நிகழ்த்தி, நமது அன்றாட வாழ்க்கையில் இந்த உரையாடல்களை இயல்பாக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளார்.



இது குறித்து நடிகை  ஸ்ருதிஹாசன் கூறுகையில்..,



நேரடி அமர்வுகளை நடத்துவதன் முக்கிய நோக்கமே, இந்த தலைப்புகளைப் பற்றி சமூகத்தில் ஒரு விவாதத்தை, உரையாடலை துவக்கவேண்டும் என்பதே ஆகும். ஒருவரின் பிறந்தநாளைக் கொண்டாட, பல வழிகள் உள்ளன. ஆனால் என்னைப் பொறுத்தவரை கொண்டாட்டம்  என்பது,  நான் அக்கறை கொண்ட விஷயங்களைப் பற்றி நேர்மையான விவாதங்களைத் சமூகத்தில் ஏற்படுத்துவதே ஆகும்.






 


இது குறித்து இன்னும் சமூகத்தில்  அதிகம் பேசப்படவேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்த தலைப்புகளில் நிகழும், உரையாடலில் நிறைய நபர்களை இணைத்து, நேரலையின் போது பலரிடமிருந்து மாறுபட்ட கண்ணோட்டங்களைப் பெறுவதும், இந்தச் சிக்கல்களை குறித்து அவர்களை  சிந்திக்க வைப்பதும், பகிரவும் மற்றும் விவாதிக்கவும் வைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்” என்று கூறியுள்ளார்.