முதிர்ச்சியான நடிப்பு மற்றும் செதுக்கப்பட்ட உடல்வாகிற்கு பெயர் போனவர் நடிகை ஸ்ருதி ஹாசன். நடிப்பு, இசை என தன்னை எப்போதும் பிஸியாக வைத்துக் கொள்கிறார். 36 வயதாகும் அவர் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டது குறித்து பேசியுள்ளார். நடிகர் கமல் ஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதி ஹாசன் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். தனது ரசிகர்களின் கேள்விகளுக்கும் அவ்வப்போது பதிலளித்து வருபவர். தமிழில் பூஜை, ஏழாம் அறிவு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவரது நடிப்பில் பெஸ்ட் செல்லர் இணையத் தொடர் அமேஸானில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஸ்ருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கையை எப்போதும் திறந்த புத்தகமாகவே வைத்து வருபவர். எதையும் ஒளிவு மறைவு இன்றி வெளிப்படையாக தெரிவிப்பவர். தனது காதலர் குறித்தும் முன்பே அறிவித்துவிட்டார். இவர், 2020ம் ஆண்டு முதல் சாந்தனு என்பவரை காதலித்து டேட்டிங்கில் இருந்து வருகிறார். இதையடுத்து, இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. முன்னதாக, லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை என்ற நாடக நடிகரை காதலித்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரேக் அப் செய்து கொண்டனர்.



இதையடுத்து, தான் மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக ஸ்ருதி தெரிவித்திருந்தது  குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தமிழ் படங்களை விட தெலுங்கு மொழியில் அதிக கவனம் செலுத்தி வரும் ஸ்ருதி -பிரபாஸ் ஜோடியாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் தயாராகும் சலார் படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது பாலகிருஷ்ணாவுக்கு 107-வது படமாகும்.


இந்நிலையில் சிரஞ்சீவியின் 154-வது படத்தில் சுருதிஹாசன் நடிக்கவுள்ளதாக சோசியல் மீடியா வாயிலாக சிரஞ்சீவி அறிவித்துள்ளார். ஆனால் சமீபத்தில்தான் கொரோனாவில் இருந்து மீண்ட ஸ்ருதி ஹாசன், ஸ்டாமினா குறைவால் இன்னும் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளாமல் இருக்கிறார். அவரது கொரோனா அனுபவத்தை கூறுகையில், "கோரோனாவில் இருந்து மீண்டு வரும் காலத்தில், ​​நான் எவ்வளவு கவனமாக இருக்க முடியுமோ அவ்வளவு கவனமாக இருந்தேன் என்பதை உணர்ந்தேன். நாம் மிகவும் பொறுப்பாக இருக்க வேண்டும், தொடர்ந்து கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், இது சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றல்ல”என்று நடிகை ஸ்ருதிஹாசன் கூறுகிறார். பிப்ரவரி கடைசி வாரத்தில் கொரோனா தோற்றால் ஸ்ருதிஹாசன் பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



அதுகுறித்து மேலும் பேசிய அவர், "பலர் தடுப்பூசி எடுத்துக்கொண்டால் கொரோனா வராது என்று நினைக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை, தடுப்பூசி கொரோனா வைரசின் தாக்கத்தையும், அறிகுறிகளையும் குறைக்கும் அவ்வளவுதான். நோயில் இருந்து மீண்ட பிறகு அதிலிருந்து விரைவாக வெளியில் வர நிறைய வழிகள் உள்ளன. ஆனால் உடலை அதற்காக வருத்தாமல் தானாக சரி ஆக விட வேண்டும்." என்று பேசிய அவர், அவர் திரைப்படங்களை குறித்து பேசினார், "பெஸ்ட்செல்லரில் எனது கதாப்பாத்திரம் நன்றாக மக்களிடம் சென்று சேரும் என்று நம்பியிருந்தேன், என் நம்பிக்கை வீண் போகவில்லை எனபதில் பெரும் மகிழ்ச்சி. நான் நடிக்கும் திரைப்படங்களை மக்கள் நல்ல விதமாக சொன்னாலும், விமர்சனம் செய்தாலும், அது அவர்களுடன் இன்ட்ராக்ட் செய்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சி. எதையும் நான் உணர்வுப்பூர்வமாக அணுகுவதில்லை, எல்லாவற்றையும் என் வளர்ச்சிக்காகவே செயல்படுத்துகிறேன்.” என்றார்.