சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற தொலைக்காட்சிகளில் முதலிடம் வகிக்கும் சன் டிவியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. காலையில் துவங்கும் சீரியல்கள் வரிசையாக இரவு வரை ஒளிபரப்பாகி வரும் நிலையில் அனைத்து சீரியல்களும் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்து வருகின்றன. ஒவ்வொரு சீரியலுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் 'தாலாட்டு' சீரியல் கடந்த 2021 ஆண்டு தொடங்கப்பட்டு 700 எபிசோட்களை கடந்து மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்தது.


அந்த சீரியல் கடந்த சனிக்கிழமையோடு முடிவுக்கு வந்தது. தாலாட்டு சீரியலின் கடைசி நாள் படப்பிடிப்பு அன்று கேக் வெட்டி சீரியல் குழு கொண்டாடியது. அதன் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகின. 


 



தாலாட்டு சீரியலின் ஹீரோவாக 'தெய்வமகள்' சீரியல் மூலம் பிரபலமான கிருஷ்ணாவும், ஹீரோயினாக 'தென்றல்' தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமான ஸ்ருதி ராஜும் நடித்து வந்தனர். அவர்களோடு ஸ்ரீதேவி அசோக், ஸ்ரீலதா, தரணி, சர்வேஷ் ராகவ், ரிஷி கேஷவ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர். இந்த தொடரில் இசைப்பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ருதி ராஜ், தாலாட்டு சீரியலின் கடைசி நாள் ஷூட்டிங்கின் போது எடுத்த வீடியோவுடன் பதிவு ஒன்றையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். "தாலாட்டு ஷூட்டிங் முடிந்தது. இந்த டீமையும் இசையையும் மிகவும் மிஸ் செய்வேன்" என பகிர்ந்து இருந்தார்.


மேலும் சக நடிகர்களுடன் இணைந்து ரீல்ஸ் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். "தாலாட்டு டீமுடன் சேர்ந்து கடைசி ரீல்ஸ். இந்த ப்ரொஜெக்டில் நடிக்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் ஷங்கர் வெங்கட்ராமனுக்கு நன்றி. இசை கதாபாத்திரம் எனது இதயத்தோடு என்றுமே நெருக்கமாக இருக்கும். இந்த தொடரில் எனக்கு ஆதரவு அளித்த மக்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். என்றுமே எனக்கு ஆதரவு அளியுங்கள். லவ் யூ" என உருக்கமான பதிவு ஒன்றை போஸ்ட் செய்துள்ளார் ஸ்ருதி ராஜ். 







ஸ்ருதி ராஜ், சன் டிவியில் ஒளிபரப்பான 'தென்றல்' சீரியல் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஆபிஸ்' தொடரில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.


சின்னத்திரை மட்டுமின்றி ஒரு சில திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் ஸ்ருதி ராஜ். தற்போது அவர் நடித்து வந்த 'தாலாட்டு' சீரியலில் இசைப்பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் இதயங்களில் மிகவும் நெருக்கமான இடத்தை பிடித்தார். தனது சிறப்பான நடிப்பிற்காக ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் ஸ்ருதிராஜ்.