போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக தமிழக முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது போலீசாரின் கவனம் திரையுலகத்தின் மீதும் திரும்பியுள்ளது. ஏற்கனவே நடிகர் ஸ்ரீகாந்த் இந்த விவகாரத்தில் சிக்கிய நிலையில், தற்போது நடிகர் கிருஷ்ணாவும் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பார் ஒன்றில் அதிமுக முன்னாள் நிர்வாகியும், தயாரிப்பாளருமான பிரசாந்த் என்பவர் அடிதடி பிரச்சனை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருடைய செல்போனை கைப்பற்றி சோதனை செய்தபோது, அதில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சில மெசேஜ்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை வைத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்த போது, பிரசாந்த், பிரதீப் என்பவரிடம் போதை பொருள் வாங்கியதை ஒப்புக்கொண்டார்.
மேலும் பிரதீப் கொடுத்த தகவலின் பெயரிலேயே, நடிகர் ஸ்ரீகாந்தும் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதேபோல் நடிகர் கிருஷ்ணாவும் போலீசாரின் விசாரணை வலையத்திற்குள் கொண்டுவரப்பட்டார். இந்த போதை மருந்து விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை செய்த போது, அவர் போதை மருந்து பயன்படுத்துவதை ஒப்புக்கொண்டார். மேலும் தனக்கு இந்த பழக்கத்தை பழக்கப்படுத்தியது, தன்னை வைத்து 'தீக்கிரை' என்கிற திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் பிரசாந்த் என்பதையும் குறிப்பிட்டு கூறியிருந்தார்.
'தீக்கிரை' திரைப்படத்தில் நடித்த போது, பிரசாந்த் தனக்கு தர வேண்டிய சம்பள பாக்கி ரூ.10 லட்சம் பணத்தை அவரிடம் கேட்டபோதெல்லாம், போதை பொருளை தன்னிடம் கொடுத்து போதைக்கு தன்னை அடிமையாக்கிவிட்டார் என கூறினார். தற்போது நடிகர் ஸ்ரீகாந்த் ஜூலை 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், நடிகர் கிருஷ்ணாவும் போதை பொருளை பயன்படுத்தியதாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணாவுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் சம்மன் அனுப்பி போலீசார் விசாரணை செய்ய முடிவு செய்த நிலையில், கிருஷ்ணா போலீசாரின் விசாரணைக்கு பயந்து கேரளாவுக்கு தப்பி ஓடி தலை மறைவானார். இதை தொடர்ந்து 4 தனிப்படை அமைத்து கிருஷ்ணாவை தேடி வந்த போலீசார் நேற்று மாலை ஒன்றரை மணி அளவில் போலீசார் கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணையை துவங்கினர். விடிய விடிய அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கிருஷ்ணா தனக்கு உடலில் இரைப்பை மற்றும் இதயத்தை பிரச்சனை இருப்பதால் போதை மருந்தை உட்கொள்ள வாய்ப்பே இல்லை என கூறினார். அவரிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்ட போது, அவர் போதை பொருள் உட்கொள்ளவில்லை என்பது தெரிய வந்தது.
எனவே இந்த விசாரணைக்கு பின்னர் கிருஷ்ணா மீது எந்த ஒரு நடவடிக்கையும் பாயாது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்... கிருஷ்ணாவின் 2020 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை டெலிட் செய்யப்பட்ட அவருடைய குறுஞ்செய்திகளை போலீசார் சோதனை செய்ய துவங்கினர். அதில் சில கோட் வேர்ட் பயன்படுத்தி நண்பர்களுடன் கிருஷ்ணா பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி கிருஷ்ணாவிடம் கேள்வி எழுப்பிய போது, முன்னுக்கு பின் முரணாக பதில் பேச தொடங்கினார். இதுவே அவர் போலீசாரிடம் சிக்க காரணமாகவும் அமைந்தது.
அவரிடம் துருவி துருவி விசாரணை செய்த போது, கிருஷ்ணா கெவின் என்பவரிடம் போதை மருந்து வாங்கியது தெரியவந்துள்ளது, இதைத் தொடர்ந்து தற்போது போலீசார் கெவின் என்பவரையும் கைது செய்துள்ளனர். கிருஷ்ணா போதை மருந்தை பயன்படுத்தவில்லை என்றாலும், அதை வாங்கி வேறு யார்யாருக்கு விட்டார், எந்தெந்த பிரபலங்கள் போதைக்கு அடிமையாகி உள்ளனர் என்கிற தகவல்களை தற்போது போலீசார் சேகரித்து வருகிறார்கள். மேலும் இதில் கோலிவுட் திரை உலகை சேர்ந்த பல பிரபலங்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.