கடந்த 2007 ஆம் ஆண்டு ராஜாஸ்தானில் நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில், பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரெ பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியை விழா மேடையில் வைத்தே கட்டியணைத்து முத்தமிட்டார். இதனை  சற்றும் எதிர்பார்க்காத ஷில்பா ஷெட்டி ஆரம்பத்தில் அதிர்ச்சியடைந்தாலும், பின்னர் சிரித்தபடி அதனை சகஜமாக ஏற்றுக்கொண்டார். 




இந்த சம்பவத்திற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனங்களை பதிவு செய்து எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக இந்திய சட்டப்பிரிவுகள் 292, 293 மற்றும் 294 இன் கீழ் வழக்குகளும் தொடரப்பட்டன. ஆரம்பத்தில் ராஜஸ்தானில் பதிவான இந்த வழக்கை ஷில்பா மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு மாற்றினார்.


மேலும் அவர் தாக்கல் செய்த மனுவில், “ ரிச்சர்ட் கெரெ முத்தமிட்டபோது தான் தடுக்கவில்லை என்றுதான் தன்மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஆனால் வழக்குத்தொடர பயன்படுத்திய சட்டப்பிரிவுகளின்கீழ் தான் எந்த குற்றமும் செய்யவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.


 






மும்பை பெட்ரோ பாலிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணை நிறைவு பெற்ற நிலையில் நீதிபதி சவான், நடிகை ஷில்பா ஷெட்டியை விடுதலை செய்து உள்ளார்.


 






இது தொடர்பாக அவர் வழங்கிய தீர்ப்பில்,  “ இந்த வழக்கில், ரிச்சர்ட் கெரெ செய்த நடவடிக்கையால் ஷில்பா ஷெட்டி பாதிக்கப்பட்டுள்ளார். அவர் பாதிக்கப்பட்டவர். காவல்துறை சமர்பித்த ஆவணங்களின் அடிப்படையில் பார்க்கும் போதும், அவருக்கு எதிரான குற்றசாட்டுகள் எதுவும் ஆதாரமற்றவை என்பது தெரிகிறது. இதனால் அவரை இந்த நீதிமன்றம் விடுவிக்கிறது” என்று கூறினார்.