நடிகைகள் ஹூமா குரேஷி, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து விரைவில் திரைக்கு வர உள்ள திரைப்படம் ‘டபுள் எக்ஸ்எல்’


இந்தப் படத்தின் மூலம் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகார் தவான் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். நகைச்சுவை ஜானரில் அமைந்துள்ள இந்தப் படத்தில் ஷிகார் தவான் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


மேலும், தமிழ் நடிகர் மஹத், இந்தி நடிகர் ஜாஹீர் இக்பால் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சத்ரம் ரமணி படத்தை இயக்கியுள்ளார்.


இந்நிலையில் முன்னதாக ஹூமா குரேஷியுடன் ஷிகார் தவான் கைகள் கோர்த்து நடனமாடும்படியான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.


 






தனது டிரேட்மார்க் ஹேர்கட்டில் கருப்பு நிற கோர்ட்டில் ஷிகார் தவான்  ஹூமா குரேஷியுடன் காதல் பொங்க கைக்கோர்த்திருக்கும் இந்தப் புகைப்படம் இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.


இரண்டு பெண்களின் வாழ்க்கைப்  பயணத்தைப் பற்றியதாக அமைந்துள்ள இந்தப் படத்தில் மீரட்டைச் சேர்ந்த விளையாட்டுத் தொகுப்பாளினியாக ஹூமா குரேஷி நடித்துள்ளார். புது தில்லியைச் சேர்ந்த ஃபேஷன் டிசைனராக சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ளார்.


நவம்பர் 4ஆம் தேதி இப்படம் நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.


முன்னதாக படத்தின் கதை தன்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், அதன் காரணமாகவே தான் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும்  ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.


 






இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், “தேசத்துக்காக விளையாடும் ஒரு விளையாட்டு வீரராக, என் வாழ்க்கை எப்போதும் மிகவும் பரபரப்பாக இருக்கும். நல்ல பொழுதுபோக்குப் படங்களைப் பார்ப்பது எனக்குப் பிடித்தமான செயல்களில் ஒன்று.


இந்தக் கதை, கேட்டதும் என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இது முழு சமூகத்துக்கும் ஒரு அழகான செய்தியாகும். இப்படத்தைப் பார்த்து பல இளம் பெண்கள், சிறுவர்கள் தங்கள் கனவுகளைத் தொடருவார்கள் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.